தஞ்சாவூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளைக்கோடு வரையாததால் விபத்து அபாயம்


திருச்சி - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் புதுக்குடி- முதல் பூதலூர் பிரிவு சாலை வரை இடது புற சாலையோரம் வெள்ளைக்கோடு வரையப்படாமல் உள்ளது. படம்: ஆர்.வெங்கடேஷ்.

தஞ்சாவூர்: திருச்சி - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் புதுக்குடி - முதல் பூதலூர் பிரிவு சாலை வரை சாலையோரத்தில் வெள்ளைக்கோடு வரையப்படாததால், இரவு நேரங்களில் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, வெள்ளைக்கோடு வரைய வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர் - திருச்சி இடையே உள்ள தேசிய நெடுஞ்சாலை வழியாக நாள்தோறும் ஆயிரக் கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தஞ்சாவூர் மாவட்டம் புதுக்குடி முதல் பூதலூர் பிரிவு சாலை வரை சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது,சாலையின் ஒரு பகுதியில் வலது பக்கத்தில் மட்டுமே சாலையோரத்தை குறிக்கும் வகையில் வெள்ளை நிற எச்சரிக்கை கோடு வரையப் பட்டுள்ளது.

இடது புறம் வெள்ளை நிற எச்சரிக்கை கோடு வரையப்படவில்லை. மேலும், வளைவுகளில் எச்சரிக்கை ஸ்டிக்கர்கள் எதுவும் இல்லை. இதனால், இந்த சாலையில் வாகன விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் இந்த பகுதியில் வெள்ளை நிற எச்சரிக்கை கோடுகளை வரைந்து, வளைவு பகுதிகளில் அவற்றை குறிக்கும் ஸ்டிக்கர்களை பொருத்தி, விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர்.

x