ஸ்ரீவில்லி. அருகே சாலையின் நடுவே உள்ள மின் கம்பத்தை இடமாற்ற வலியுறுத்தல்


ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விழுப்பனூர் முத்து நகரில் சாலையின் நடுவே உள்ள மின் கம்பம்.

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே போக்கு வரத்துக்கு இடையூறாக உள்ள மின் கம்பத்தை இடமாற்ற வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விழுப் பனூர் முத்துநகரில் நூற்றுக்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன. முத்து நகருக்குச் செல்லும் பிரதான சாலையின் நடுவே மின்கம்பங்கள் உள்ளன. இதனால் கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. விரிவாக்க பகுதியான இப்பகுதியில் வீடு கட்டுவோர் கட்டுமானப் பொருட்களை கொண்டு செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர்.

சாலையின் நடுவே மின் கம்பம் இருப்பதால் இரவு நேரங்களில் பைக் மோதி விபத்து ஏற்படுகிறது. இது குறித்து பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. உடனடியாக மின் கம்பங்களை இடமாற்றம் செய்ய மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.