T20 WC | உகாண்டாவை வீழ்த்தியது மே.இ.தீவுகள்


கயானா: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 134 ரன்கள் வித்தியாசத்தில் உகாண்டா அணியை வீழ்த்தியது.

குரூப் சி பிரிவில் நேற்று காலை 6 மணிக்கு கயானா மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் மேற்கு இந்தியத் தீவுகள், கயானா அணிகள் மோதின. இதில் முதலில் விளையாடிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 173 ரன்கள் குவித்தது.

தொடக்க ஆட்டக்காரர்கள் பிரண்டன் கிங் 13, ஜே. சார்லஸ் 44 ரன்கள் எடுத்தனர். நிக்கோலஸ் பூரன் 22, கேப்டன் ரோமன் பவல் 23, ஷெர்பான் ருதர்போர்ட் 22 ரன்கள் சேர்த்தனர். கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய ஆந்த்ரே ரஸ்ஸல் 17 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ரொமாரியோ ஷெப்பர்ட் 5 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். உகாண்டா தரப்பில் கேப்டன் மசாபா 2, அல்பேஷ் ராம்ஜனி, காஸ்மாஸ் கியேவுட்டா, தினேஷ் நக்ரானி ஆகியோர் தலா ஒரு விக்கெட் சாய்த்தனர்.

பின்னர் 174 ரன்கள் என்ற கடின இலக்குடன் விளையாடிய உகாண்டா அணி 12 ஓவர்களில் 39 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மேற்கு இந்தியத் தீவு அணி வீரர்களின் அபாரமான பந்துவீச்சைத் தாக்குப் பிடிக்க முடியாமல் அந்த அணி குறைந்த ரன்களிலேயே சுருண்டது. அந்த அணியின் ஜுமா மியாகி மட்டும் 13 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களிலேயே பெவிலியன் திரும்பினர்.

மேற்கு இந்தியத் தீவுகள் அணி தரப்பில் அகீல் ஹொசைன் 4 ஓவர்கள் பந்துவீசி 11 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களைக் கைப்பற்றினார். அல்சாரி ஜோசப் 2 விக்கெட்களையும், ரொமாரியோ ஷெப்பர்ட், ஆந்த்ரே ரஸ்ஸல், குடகேஷ் மோதி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 5 விக்கெட்களை வீழ்த்திய அகீல் ஹொசைன் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

குரூப் சி பிரிவில் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு இது 2-வது வெற்றியாக அமைந்தது. அதே நேரத்தில், உகாண்டா அணி 3 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி, 2 தோல்விகளைப் பெற்றுள்ளது.

குறைந்த ரன்களுக்கு ஆல்-அவுட்: நேற்று நடைபெற்ற மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் உகாண்டா அணி 39 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் குறைந்த ரன்களுக்கு ஆட்டமிழந்து நெதர்லாந்தின் சாதனையை சமன் செய்துள்ளது உகாண்டா. 2014-ல் சட்டோகிராமில் நடைபெற்ற போட்டியில் இலங்கைக்கு எதிராக நெதர்லாந்து 39 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

சர்வதேச டி20 போட்டிகளில் ஒரு ஆட்டத்தில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய மேற்கு இந்தியத் தீவுகள் அணி வீரர்கள் வரிசையில் அகீல் ஹொசைன் 2-வது இடத்தைப் பிடித்துள்ளார். நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் அவர் 11 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களைக் கைப்பற்றினார். 2022-ல் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஒபெட் மெக்காய் 17 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்கள் கைப்பற்றி முதலிடத்தில் உள்ளார்.

உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணிகள் வரிசையில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 2-வது இடத்தைப் பெற்றுள்ளது. இலங்கை அணி 2007-ல் கென்யா அணிக்கெதிராக 172 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதலிடத்தில் உள்ளது. 134 ரன்கள் வித்தியாசத்தில் உகாண்டா அணிக்கெதிராக வெற்றி பெற்று 2-வது இடத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி உள்ளது.

இன்றைய ஆட்டம்
வங்கதேசம் - தென் ஆப்பிரிக்கா
இடம்: நியூயார்க்; நேரம்: இரவு 8 மணி
நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

x