அண்ணாமலை தலைமையால் தமிழகத்தில் பாஜக வலுவிழந்துள்ளது: ஈவிகேஎஸ் இளங்கோவன் கருத்து


மதுரை: தமிழகத்தில் அண்ணாமலை தலைமையால் பாஜக வலுவிழந்துள்ளது என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் கூறினார்.

மதுரையில் செய்தியாளர்களி டம் அவர் நேற்று கூறியதாவது: மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகும், பிரதமர் மோடிதனது போக்கை மாற்றிக் கொள்ளவில்லை. சந்திரபாபு நாயுடுவும், நிதிஷ்குமாரும் எப்போது வேண்டுமானாலும் ஆதரவை விலக்கிக் கொள்ள வாய்ப்பு உள்ளது. முதல்நாடாளுமன்றக் கூட்டத் தொடரை நடத்துவார்களா என்பதே சந்தேகம்தான்.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையால், மாநகராட்சி கவுன்சிலர் தேர்தலில்கூட வெல்ல முடியாது. அவரது வாய் ஜாலத்துக்கெல்லாம் தமிழக மக்கள் மயங்க மாட்டார்கள். தமிழக அரசியலில் அவர் மிளிரமாட்டார்.

அதிமுக கூட்டணியில் இருந்ததால்தான், தமிழக மக்களுக்கு பாஜகவை ஓரளவுக்குத் தெரிந்தது. தமிழகத்தில் என்றென்றும் பாஜக காலூன்ற முடியாது. மக்களவைத் தேர்தல் தோல்வியைஏற்றுக்கொண்டு அண்ணாமலை யும், தமிழிசையும் அமைதியாக இருக்கவேண்டும். தமிழிசை, எல்.முருகன் காலத்தில் இருந்த பாஜக, அண்ணாமலை தலைமையில் தற்போது வலுவிழந்துள்ளது.

தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் ஆட்சி, காமராஜர் ஆட்சி போல் பொற்கால ஆட்சியாக நடக்கிறது. மூன்றாவது முறையாக பிரதமராக மோடி பதவி ஏற்றது, மக்களுக்கு ஏற்பட்ட வேதனை. அது இன்னும் 5 மாதங்களுக்குள் தீரும். மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் நம்பிக்கை உள்ளது. இது என் சொந்த கருத்து. ரஜினி மலைக்குச் சென்று வந்த பின்னர், அவருக்கு தெளிவு பிறந்துள்ளது. இவ்வாறு ஈவிகேஎஸ்.இளங்கோவன் கூறினார்.