வாக்காளர்களுக்கு நன்றி கூறும் வகையில் கோவையில் ஜூன் 14-ல் திமுக முப்பெரும் விழா


கோவை செட்டிபாளையம் எல் அண்ட் டி புறவழிச்சாலை பகுதியில் திமுக முப்பெரும் விழா நடைபெற உள்ள இடத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சு.முத்துசாமி மற்றும் திமுக நிர்வாகிகள்.

கோவை: மக்களவைத் தேர்தலில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி கூறும் வகையில், கோவையில் வரும் 14-ம் தேதி திமுக சார்பில் முப்பெரும் விழா நடக்கிறது.

கோவை செட்டிபாளையம் எல் அண்ட் டி புறவழிச்சாலை பகுதியில் முப்பெரும் விழா நடைபெறும் இடத்தில் அமைச்சர் சு.முத்துசாமி மற்றும் திமுக நிர்வாகிகள் நேற்று ஆய்வு செய்தனர். பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் சு.முத்துசாமி கூறியதாவது:

மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு தமிழக மக்கள் அமோக வெற்றியை வழங்கியுள்ளனர். இதையடுத்து, கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா, வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தல், வெற்றிவியூகம் வகுத்த திமுக நிர்வாகிகளுக்குப் பாராட்டு ஆகிய முப்பெரும் விழாவை, கோவையில் நடத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுமதி அளித்துள்ளார்.

வரும் 14-ம் தேதி மாலை செட்டிபாளையம் எல் அண்ட் டிபுறவழிச்சாலை பகுதியில் நடைபெறும் விழாவில், வெற்றி பெற்ற40 மக்களவைத் தொகுதி உறுப்பினர்கள், திமுக கூட்டணிக் கட்சிநிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாகப் பங்கேற்க உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆய்வின்போது, கோவை மாவட்ட திமுக செயலாளர்கள் நா.கார்த்திக், தளபதி முருகேசன், தொ.அ.ரவி உடனிருந்தனர்.