“ஜூன் 4-க்குப் பிறகு ஊழல்வாதிகள் தங்கள் வாழ்நாளை சிறையில்தான் கழிப்பார்கள்” - மோடி உத்தரவாதம்


புருலியா (மேற்கு வங்கம்): ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகு புதிய அரசு பொறுப்பேற்றவுடன், ஊழல்வாதிகள் சிறையில்தான் தங்களது வாழ்நாளை கழிப்பார்கள். இது மோடியின் உத்தரவாதம் என பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் புருலியா மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் பங்கேற்று பேசுகையில், “இண்டியா கூட்டணியில் உள்ள திரிணமூல் காங்கிரஸ் உட்பட அனைவருமே ஊழல்வாதிகள்.

ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகு புதிய அரசு பொறுப்பேற்றவுடன் அவர்கள் அனைவருமே சிறையில்தான் தங்களது வாழ்நாளை கழிக்கவேண்டியிருக்கும். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஊழல்வாதிகள் மீதான நடவடிக்கை தீவிரமடையும். இது, மோடியின் உத்தரவாதம்.

இஸ்கான், ராமகிருஷ்ணா மிஷன், பாரத் சேவாஷ்ரம் சங்கத்துக்கு எதிராக அவதூறுகளை பரப்பும் வகையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்த கருத்து மிகவும் கண்டனத்துக்குரியது. ஒரு சாராரின் வாக்கு வங்கியை குறிவைத்து இந்து சமூக- மத அமைப்புகளுக்கு எதிராக அவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். திரிணமூல் காங்கிரஸ் அதன் கண்ணியத்தின் எல்லையை தாண்டிவிட்டது’’ என்றார்.

முன்னதாக ஆரம்பாக் தொகுதிக்கு உட்பட்ட கோகாட்டில் நடந்த தேர்தல் பிரச்சார பேரணியில் பேசிய மம்தா பானர்ஜி, “ராம கிருஷ்ணா மிஷன் மற்றும் பாரத் சேவாஷ்ரம் சங்கத்தின் சில துறவிகள் டெல்லியில் பாஜக தலைவர்களின் செல்வாக்கைப் பெற்று அதன்படி செயல்படுகின்றனர்.

கோயில்களை பராமரிப்பவர்கள் சிறந்த ஆன்மிக பணிகளை செய்து வருகின்றனர். ஆனால், எல்லோரும் அப்படி இல்லை’’ என்று குற்றம் சாட்டியிருந்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். இதனிடையே ஜார்க்கண்டின் ஜாம்ஷெட்பூர் நகரில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினார். அப்போது அவர் கூறுகையில், “காங்கிரஸ் கட்சி வாரிசு அரசியலை ஆதரிக்கிறது.

மக்களவை தொகுதிகளை அது தங்களது மூதாதையர் சொத்துகளை போல கருதுகிறது. காங்கிரஸ் கட்சியின் இளவரசர் (ராகுல் காந்தி) மாவோயிஸ்ட் மொழியில் பேசி தொழிலதிபர்களை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்குகிறார்.

அதனால் எந்த தொழிலதிபரும் அக்கட்சி ஆளும் மாநிலங்களில் முதலீடுசெய்வதற்கு முன் 50 முறை யோசிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இத்தனை ஆண்டு காலம் காங்கிரஸ் கட்சி ஆட்சியிலிருந்தும் மக்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவில்லை.

18,000 கிராமங்களின் நிலை 18-ம் நூற்றாண்டைப் போலதான் இருந்தது. அம்மாவுக்கு பதிலாக மகன் (ராகுல்காந்தி) ரேபரேலி தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது எட்டு வயது பள்ளி சிறுவனுக்கு கூட தெரியும்’’ என்றார்.

x