குற்றாலம் அருவியில் இறந்த மாணவர் வஉசி குடும்பத்தை சேர்ந்தவர்


கோவில்பட்டி: திருநெல்வேலி ஸ்ரீராம் நகரைச் சேர்ந்தவர் குமார். இவர் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு கிராம வங்கி கிளையில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.

இவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் ஸ்ரீராம் நகரில் வசித்து வருகின்றனர். இவரது மகன் அஸ்வின் (17) அங்குள்ள சிபிஎஸ்இ பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கோடை விடுமுறைக்கு தென்காசியில் உள்ள பாட்டி வீட்டுக்கு சென்ற அஸ்வின், தனது உறவினர்களுடன் கடந்த 17-ம் தேதி பழைய குற்றாலம் அருவியில் குளிக்கச் சென்றார்.

அப்போது வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தார். அஸ்வின் சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சி.யின் கொள்ளு பேத்தியின் மகன் வயிற்று பேரன் என்பது தெரியவந்துள்ளது. வ.உ.சிதம்பரனாரின் மகன் ஆறுமுகம் பிள்ளை. அவரது மகள் செண்பகவள்ளி அம்மாளின் மகள் சிதம்பரவள்ளி. இவரது மகன் குமார். குமாரின் மகன் அஸ்வின்.