வாக்களிக்கும்படி மும்பை மக்களுக்கு பாலிவுட் பிரபலங்கள் வேண்டுகோள்


மகாராஷ்டிரா உட்பட நாட்டின் பல பகுதிகளில் இன்று 5-ம் கட்ட மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. மும்பை மக்கள் தவறாமல் வாக்களிக்கும்படி பாலிவுட் பிரபலங்கள் ஷாருக்கான், சல்மான் கான், அக்ஷய் குமார், ஷில்பா ஷெட்டி, சுனில் ஷெட்டி உட்பட பலர் சமூக ஊடகங்களில் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஷாருக்கான் விடுத்துள்ள செய்தியில், ‘‘பொறுப்புள்ள இந்திய குடிமக்களாக நாம் நமது வாக்களிக்கும் உரிமையை மகாராஷ்டிராவில் இன்று பயன்படுத்த வேண்டும். நாட்டு நலனை மனதில் கொண்டு நாம் நமது கடமையை ஆற்றுவோம். நமது வாக்குரிமையை நிறைவேற்ற முன்னோக்கி செல்லுங்கள்’’ என குறிப்பிட்டுள்ளார்.

சல்மான் விடுத்துள்ள செய்தியில், ‘‘எதுவாக இருந்தாலும் நான் ஆண்டு முழுவதும் உடற்பயிற்சி செய்கிறேன். எதுவாக இருந்தாலும், நான் மே 20-ம் தேதி எனது வாக்குரிமையை நிறைவேற்றுவேன். அதனால் நீங்கள் என்ன செய்ய விரும்பினாலும், வாக்களிக்க செல்லுங்கள். பாரத் மாதா கி ஜே ’’ என குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் அக்ஷய் குமார் விடுத்துள்ள செய்தியில், ‘‘5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் வாய்ப்பு மும்பை மக்களுக்கு மே 20-ம் தேதி கிடைத்துள்ளது. உங்கள் வாக்களிக்கும் உரிமையை நிறைவேற்றி, உங்கள் மக்களவை எம்.பி.யை தேர்வு செய்யுங்கள்’’ என குறிப்பிட்டுள்ளார்.