தருவைகுளத்தில் நிறுத்தப்பட்ட படகு சேவை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்


தருவைகுளத்தில் உள்ள கடற்கரையில் அமைக்கப்பட்ட மரப்பாலம் உடைந்து கிடக்கிறது. (வலது) இயக்கமின்றி ஓரங்கட்டப்பட்டுள்ள படகு.  படங்கள்: என்.ராஜேஷ்.

கோவில்பட்டி: தருவைகுளம் கடலுக்குள் இயக்கப்பட்ட சுற்றுலா படகு சேவை நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தில் அலைகள் அதிகமின்றி கடல் அமைதியாக காணப்படும். பவளப்பாறைகள், கலர் மீன்கள், கடல் பசுக்கள், கடல் குதிரைகள், அட்டைகள், சங்குகள், கோரைகள், கடற்பாசிகள் உள்ளிட்ட பல உயிரினங்கள் இங்கு அதிகமாக காணப்படுகின்றன. இப்பகுதியை சுற்றுலாத் தலமாக மேம்படுத்தும் பொருட்டு,கடலில் உள்ள அரியவகை உயிரினங்களை பொதுமக்கள் காணும் வகையில், சமூகம் சார்ந்த சூழல்சுற்றுலா மையம் இங்கு ஏற்படுத்தப்பட்டது.

கடலில் பவளப்பாறைகள் உள்ளிட்டவைகளை சுற்றுலா பயணிகள் காண்பதற்காக கண்ணாடிஇழைப் படகு வடிவமைக்கப்பட்டது. இந்த படகு சேவை கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் இறுதியில் தொடங்கப்பட்டது. பயணத்தின் போது, மழைத் துளியைப் போல் விழும் அயிரை மீன்கள் கூட்டமாக துள்ளி குதிப்பதையும், கரும்பச்சை நிறத்தில் தெரியும் கடல் நீர், கடலுக்குள் பவளப் பாறைகள், கலர் மீன்கள், ஜெல்லி மீன்கள் ஆகியவற்றையும் கண்டு ரசிக்க சுற்றுலா பயணிகள் பெரிதும் விரும்பினர்.

இந்நிலையில், கண்ணாடி இழைப் படகை வனத்துறையினர் தூத்துக்குடிக்கு கொண்டு சென்று விட்டனர். இதனால் ஒரு படகு மட்டும் இயக்கப்பட்டு வந்தது. இந்த படகிலும் கடந்த 5 மாதங்களுக்கு முன் ஓட்டை விழுந்து, தண்ணீர் உள்ளே புகுந்தது. இதனால், படகு சேவை முற்றிலும் முடங்கியது. படகில் ஏறுவதற்காக கடலில் அமைக்கப்பட்டிருந்த மரப்பாலம், கரையில் இருந்த இருக்கைகள் ஆகியவை, கடந்த டிசம்பர் மாதம்பெய்த அதிகனமழையில் சேதமடைந்துவிட்டன. இதனால் இந்த கோடை காலத்தில் தருவைகுளம் கடல் அழகை ரசிக்க வந்த சுற்றுலாபயணிகள் ஏமாற்றத்துடன் திரும் பிச் சென்றனர்.

ஓட்டுநர் இல்லாமல் ஓய்வில் இருக்கும் புதிய படகு: தருவைகுளம் சமூகம் சார்ந்த சூழல் சுற்றுலா மையத்தின் தலைவர் அமலதாசன் கூறியதாவது: தருவைகுளத்தில் படகு சவாரி தொடங்கியதில் இருந்து, தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து சென்றனர். ஆனால், கடந்த 5 மாதங்களாக படகுகளை இயக்க முடியவில்லை. கடந்த 30 நாட்களுக்கு முன் புதிய படகை வனத்துறை கொண்டு வந்துவிட்டது. ஆனால், அதனை இயக்க ஆள் இல்லை.

தற்போதுள்ள விலைவாசிக்கு ஏற்ப படகு ஓட்டுநர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டும். படகு தளத்தில் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்த வேண்டும். வாகன நிறுத்தத்துக்கு இடம் ஒதுக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் சார்பில் விளம்பரங்கள் செய்ய வேண்டும். தரமான சாலைகள் அமைக்க வேண்டும். ஸ்கூபா டைவிங் வசதியைக் கொண்டு வர வேண்டும். மேலும், கடற்கரையில் இருந்து சுமார் 3.5 மைல் தூரத்தில் உள்ள காசிவாரி தீவு வரை படகு சவாரியை நீட்டிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.