நியோமேக்ஸ் மோசடியில் கைதானோர் சொத்துகளை ஜப்தி செயக் கோரிய வழக்கில் அரசு பதிலளிக்க உத்தரவு


மதுரை: நியோமேக்ஸ் மோசடி வழக்கில் கைதானவர்களின் சொத்துகளை முடக்கவும், ஜப்தி செய்யவும் கோரிய மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிய நியோமேக்ஸ் நிறுவனம் பொதுமக்களிடம் அதிக வட்டி தருவதாக கூறி பல ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்து மோசடியில் ஈடுபட்டது. இந்த மோசடி தொடர்பாக நியோ மேக்ஸ் இயக்குனர்கள் வீர சக்தி, கமலக் கண்ணன், பால சுப்ரமணியன், கபில் உள்ளிட்ட பலரை பொருளாதார குற்றப் பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையில், நியோமேக்ஸ் மோசடி வழக்கில் கைதானவர்களின் சொத்துகளை ஜப்தி செய்யக் கோரி சிவகங்கையைச் சேர்ந்த நடராஜன் என்பவர் உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், ”பொதுமக்களின் முதலீடு பணத்தில் நியோமேக்ஸ் மோசடி வழக்கில் கைதானவர்கள் அதிகளவில் சொத்து வாங்கி குவித்துள்ளனர். இந்த சொத்துகளின் பட்டியல் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த பட்டியல் அடிப்படையில் இந்த சொத்துகளையும், கைதானவர்களின் உறவினர்களின் சொத்துகளையும் முடக்கவும், ஜப்தி செய்யவும் உத்தரவிட வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி எஸ்.ஸ்ரீமதி, மனுதாரரின் புகார் குறித்து தமிழக உள்துறைச் செயலர், டிஜிபி, பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.

x