திருவள்ளூர் | இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணி மாநில தலைவர் கொலை


ராஜாஜி

திருவள்ளூர்: காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு அம்பாள் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜாஜி(45). இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணி என்ற அமைப்பின் மாநில தலைவரான இவருக்கு கலா என்ற மனைவியும், ஒரு மகள், இரு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில், ராஜாஜி நேற்று மாலை பூந்தமல்லி அருகே உள்ள குமணன்சாவடி, மாங்காடு சாலையில் உள்ள தேநீர் கடை ஒன்றில் அமர்ந்து தேநீர் அருந்திக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர், தேநீர் கடைக்குள் நுழைந்து, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ராஜாஜியை வெட்டிவிட்டு, மோட்டார்சைக்கிளில் சென்று விட்டார். இதில், படுகாயமடைந்த ராஜாஜி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த பூந்தமல்லி போலீஸார் சம்பவஇடம் விரைந்து, ராஜாஜியின்உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், ராஜாஜி கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணியின் நிர்வாகிகள் சம்பவ இடத்தில் திரண்டனர்.

தொடர்ந்து, ராஜாஜி கொலை குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், விசாரணை நடத்தி வருகின்றனர். கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து கொலையாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்.