வங்கியில் ரூ.7.5 கோடி நகை மோசடி: சிவகாசியில் வங்கி மேலாளர் உட்பட 3 பேர் கைது


சிவகாசி: சிவகாசி யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளையில் 15,427 கிராம் போலி நகைகளை அடகு வைத்து, ரூ.7.5 கோடி மோசடி செய்த வழக்கில் வங்கி மேலாளர், துணை மேலாளர், உதவி மேலாளரை போலீஸார் கைது செய்தனர்.

யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் திருநெல்வேலி மண்டல மேலாளர் ரஞ்சித் (45). இவரது நிர்வாகத்தின் கீழ் திருநெல்வேலி, விருதுநகர், தென்காசி உட்பட 6 மாவட்டங்களில் 46 கிளைகள் இயங்கி வருகிறது. ரஞ்சித் கடந்த பிப்ரவரி மாதம் இறுதி வாரத்தில் யூனியன் பேங்க் ஆப் இந்தியா சிவகாசி கிளையில் தணிக்கை செய்தார். அப்போது பல நகைக்கடன் கணக்குகள் நீண்ட காலமாக திருப்பப்படாமல், வட்டி மட்டும் செலுத்தி வருவது தெரியவந்தது.

அந்த கணக்குகளில் உள்ள நகைகளை ஆய்வு செய்தபோது, அவை போலியான நகைகள் என்பது உறுதியானது. இதுகுறித்து ரஞ்சித் விசாரித்த போது, நகை மதிப்பீட்டாளர் முத்துமணி உதவியுடன் சிவகாசியில் நகைக்கடை நடத்திவரும் துாத்துக்குடியை சேர்ந்த பாலசுந்தரம் என்பவர் போலி நகைகளை அடகு வைத்து ரூ.7.5 கோடி மோசடி செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து மேலாளர் ரஞ்சித் அளித்த புகாரின் பேரில், சிவகாசி நகர் போலீஸார் நகை கடை உரிமையாளர் பாலசுந்தரம், நகை மதிப்பீட்டாளர் முத்துமணி ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த வங்கி மேலாளரான பீகார் மாநிலத்தை சேர்ந்த குமார் அமரேஷ் (37), துணை மேலாளரான திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த அரவிந்த்(28), உதவி மேலாளரான தென்காசி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்த முகேஷ் குமார் (29) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.