தென்காசி அருகே லாரி மீது கார் மோதி இளைஞர் உயிரிழப்பு; 3 பேர் படுகாயம்


பிரதிநிதித்துவப் படம்

தென்காசி: தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள மருதம்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் மணிகண்டன் (24). இவர், தனது நண்பர்கள் முத்துராஜ் (27), மணிராஜ் (34), தங்கராஜ் ஆகியோருடன் நேற்று இரவு காரில் குற்றாலத்துக்கு சென்றார்.

குற்றாலம் அருவியில் குளித்துவிட்டு, இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலையில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது ஆலங்குளம் மலைக்கோயில் விலக்கு அருகே சாலையோரம் நின்ற லாரியின் பின்னால் இவர்கள் வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரை ஓட்டிச் சென்ற மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 3 பேரும் பலத்த காயமடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த ஆலங்குளம் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, காயமடைந்த 3 பேரையும் மீட்டு, சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மணிகண்டன் உடலையும் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.