புதூர் அருகே 800 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்


கோவில்பட்டி: புதூர் அருகே கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்ட 800 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீஸார், இது தொடர்பாக பாஜக நிர்வாகி உட்பட 4 பேரை கைது செய்தனர்.

புதூர் அருகே கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்ட ஒரு டன் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீஸார், இது தொடர்பாக பாஜக ஒன்றிய செயலாளரை கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு காடல்குடி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ஒரு கிட்டங்கியில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது.

அவரது உத்தரவின் பேரில் எஸ்.பி. தனிப்படை உதவி ஆய்வாளர் ரவிக்குமார் தலைமையிலான போலீஸார் புதூர் அருகே காடல்குடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காடல்குடி அருகே கந்தசாமிபுரத்தில் உள்ள ஒரு கிடங்கில், அதனருகே நின்ற சுமை வாகனத்தில் சோதனையிட்ட போது, அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் சுமார் 800 கிலோ வரை இருந்தது.

அதையும், புகையிலை பொருட்கள் கடத்த பயன்படுத்தப்பட்ட சுமை வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீஸார், கிடங்கின் உரிமையாளர் அதே கிராமத்தைச் சேர்ந்த பழனிமுருகன் (45), விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த மோகன்தாஸ் (40), கேரள மாநிலத்தைச் சேர்ந்த மொய்து உன்னி என்பவரது மகன் முகமது ஷவில் (38), செய்யது முகமது கெபிப் (34) ஆகியோரை கைது செய்து, விளாத்திகுளம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்ட பழனி முருகன், புதூர் ஒன்றிய பாஜக செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.