மூதாட்டியின் வீட்டில் 30 பவுன் நகை திருடியதாக பணிப்பெண் கைது  @ சென்னை


சென்னை: சென்னை தி.நகரில் தனியாக வசித்து வந்த மூதாட்டியின் வீட்டில் 30 பவுன் நகைகளை திருடியதாக வீட்டு பணிப்பெண்ணை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை சவுக்கார்பேட்டை சேர்ந்த வருதராஜலு (63) என்பவர் மாம்பலம் காவல் நிலையத்தில் கடந்த 22-ம் தேதி புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரில், 'எனது சகோதரி அமிர்தவல்லி (83) தி.நகர் கோபால் தெருவில் தனியாக வசித்து வருகிறார். எனது சகோதரியை கவனித்துக் கொள்ள வளர்மதி மற்றும் சத்யா என இரண்டு பணிப்பெண்களை நியமித்திருந்தேன். அதன்பேரில் அவர்கள், கடந்த சில ஆண்டுகளாக என் சகோதரி வீட்டில் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 22-ம் தேதி எனது சகோதரியை பார்ப்பதற்காக நான் சென்றபொழுது, 8 மாதங்களுக்கு முன்பு வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 30 பவுன் நகை திருடு போனது தெரியவந்தது. எனது சகோதரியை கவனித்துக் கொள்வதற்காக பணியில் அமர்த்தபட்ட சத்யா மற்றும் வளர்மதி ஆகிய இருவர் மீதும் எனக்கு சந்தேகம் இருக்கிறது. எனவே, போலீஸார் உரிய நடவடிக்கை எடுத்து நகையை மீட்டு தர வேண்டும்' எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்தப் புகாரின் பேரில் மாம்பலம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், மூதாட்டியை கவனித்து வந்த சத்யா (52) என்பவர் பீரோவில் இருந்த 30 பவுன் நகையை சிறுகச் சிறுக திருடியது தெரியவந்தது. இதனையடுத்து சத்யாவை கைது செய்த மாம்பலம் போலீஸார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.