சங்கரன்கோவில் அருகே காவல் துறை சுருக்கெழுத்தர் வெட்டிக் கொலை - போலீஸ் விசாரணை


கொலை

தென்காசி: சங்கரன்கோவில் அருகே காவல் துறையில் பணியாற்றும் சுருகெழுத்தர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள குருக்கள்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செல்வின்துரை என்பவரது மகன் பெரியதுரை (30). இவர், கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் காவல்துறை சுருக்கெழுத்தராக பணியாற்றி வந்தார்.

இதே ஊரைச் சேர்ந்த நம்பிராஜன் என்பவரது மகன் அருண்குமார் (28). இவர் காதலித்த பெண்ணை பெரியதுரையின் உறவினர் அல்லித்துரை என்பவர் திருமணம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அல்லித்துரைக்கும், அருண்குமாருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது.

இந்நிலையில், இன்று காலையில் அல்லித்துரையை தொலைபேசியில் தொடர்புகொண்ட அருண்குமார், “உன்னிடமும் உனது உறவினர் பெரியதுரையிடமும் பேச வேண்டும்” என்று கூறியுள்ளார். அவர் கூறியபடி பெரியதுரையை அழைத்துக்கொண்டு கல்லத்திகுளம் அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு அல்லித்துரை சென்றுள்ளார்.

அப்போது தன்னுடன் ஒருவரை அழைத்துச் சென்ற அருண்குமார், செல்போனைக் காட்டி அதிலுள்ள வீடியோவை பார்க்குமாறு பெரியதுரையிடம் கூறியுள்ளார். அவர் வீடியோவை பார்த்துக்கொண்டிருந்த போது அரிவாளால் அவரை அருண்குமார் வெட்டியுள்ளார். இதைப் பார்த்துவிட்டு அதிர்ச்சியடைந்த அல்லித்துரை அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இதில் சம்பவ இடத்திலேயே அருண்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த சின்னகோவிலான்குளம் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, பெரியதுரையின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்திருக்கும் போலீஸார், கொலையாளிகளை தேடி வருகின்றனர். காவல்துறையில் பணியாற்றிய சுருக்கெழுத்தர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால் அந்தப் பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.