கிர்கிஸ்தானில் சர்வதேச மாணவர்கள் மீது தாக்குதல்: பல்கலை.யிலிருந்து வெளியே வர வேண்டாம் - இந்திய தூதரகம் அறிவுறுத்தல்


கிர்கிஸ்தானில் அமைந்துள்ள இந்திய தூதரகம்

புதுடெல்லி: கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கேக்கில் உள்ள சில மருத்துவப் பல்கலைக்கழகங்களில் பயிலும் கிர்கிஸ்தான் மற்றும் எகிப்திய மாணவர்களுக்கிடையே கடந்த 13-ம் தேதி மோதல் மூண்டது. இதில் மே 16-ம் தேதியிலிருந்து சர்வதேச மாணவர்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டது.

குறிப்பாக, இந்தியா, பாகிஸ்தான் மாணவர்கள் மீது தாக்குதல் நடப்பதாக செய்தி வெளியானதும் தத்தமது மாணவர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அந்தந்த நாடுகளின் தூதரகங்கள் அறிவுறுத்தின.

இதனிடையே, பிஷ்கேக் நகரின் உள்ளூர்வாசிகள் அங்குள்ள இந்திய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியிருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. இந்திய மாணவர்கள் தங்கியுள்ள விடுதி அறைகளின் ஜன்னல்கள் மீது கல்வீச்சு நடத்தப்பட்டதாக இந்திய தூதரகத்திடம் கடந்த வெள்ளி இரவு புகார் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து கிர்கிஸ்தானில் மருத்துவம் பயிலும் ஓர் இந்திய மாணவர் செய்தியாளரிடம் அலை பேசி வழியில் கூறியதாவது: பிஷ்கேக் நகரில் ஆங்காங்கே இந்திய மற்றும் பாகிஸ்தான் மாணவர்கள் குறிவைத்து தாக்கப்பட்டு வருகின்றனர். இதுதவிர இரண்டு மருத்துவ பல்கலைக்கழகங்களின் வளாகங்களுக்குள் புகுந்த கும்பல் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. எங்களுக்கு மிகவும் அச்சமாக உள்ளது. அரசு விரைந்து தலையிட்டு எங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்படி வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த மாணவர் தெரிவித்தார்.

இந்நிலையில், கிர்கிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் நேற்று காலை வெளியிட்ட எக்ஸ் பதிவு:

உதவி எண் அறிவிப்பு: நமது மாணவர்களுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். தற்போதைக்கு நிலைமை கட்டுக்குள் இருக்கிறது. இருப்பினும் மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தைவிட்டு வெளியே வர வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறது. அவசர தேவைக்கு தூதரகத்தைத் தொடர்பு கொள்ள 24 மணி நேரமும் செயல்படக்கூடிய 0555710041 என்ற எண்ணை வழங்கியுள்ளோம். இதில் மாணவர்கள் எந்நேரமும் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டது.

கிர்கிஸ்தானில், கிட்டத்தட்ட 10 ஆயிரம் இந்திய மாணவர்களும், 11 ஆயிரம் பாகிஸ்தான் மாணவர்களும் மருத்துவ பட்டப்படிப்பு படித்து வருகின்றனர்.

x