ஆம் ஆத்மி தலைவர்கள் இன்று பாஜக அலுவலகம் வருகிறோம்: அர்விந்த் கேஜ்ரிவால்


அர்விந்த் கேஜ்ரிவால்

புதுடெல்லி: ஆம் ஆத்மி தலைவர்கள் அனைவரும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணிக்கு டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்துக்கு வருகிறோம். அப்போது பிரதமர் நரேந்திர மோடி விரும்பும் அனைவரையும் கைது செய்து சிறையில் அடைக்கலாம் என்று டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

மதுபான் கொள்கை ஊழல்வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கேஜ்ரிவால் 21 நாட்கள் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். வரும் ஜூன் 2-ம் தேதி அவர் சிறையில் சரண் அடைய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. தற்போதைய மக்களவைத் தேர்தலில் அவர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த சூழலில் முதல்வர் கேஜ்ரிவால் வீட்டில் ஆம் ஆத்மி எம்பி ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது. இதுதொடர்பாக கேஜ்ரிவாலின் தனிச் செயலாளர் பிபவ் குமார் நேற்று கைது செய்யப்பட்டார்.

இதைத் தொடர்ந்து முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் நேற்று ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது: ஆம் ஆத்மி தலைவர்களை பாஜக குறிவைத்திருக்கிறது. எங்களுடைய தலைவர்கள் அடுத்தடுத்து சிறையில் அடைக்கப்படுகின்றனர். மணீஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின், சஞ்சய் சிங் உள்ளிட்டோர் சிறையில் அடைக்கப்பட்டனர். என்னையும் சிறையில் தள்ளினர். இப்போது எனது தனிச் செயலாளர் பிபவ் குமார் கைது செய்யப்பட்டு உள்ளார்.

என்ன தவறு செய்தோம்? அடுத்ததாக ராகவ் சத்தா, சவுரப் பரத்வாஜ், ஆதிஷி ஆகியோரை சிறையில் தள்ளுவோம் என்று பாஜக கூறி வருகிறது. நாங்கள் என்ன தவறு செய்தோம்? எதற்காக எங்களை சிறையில் அடைக்கிறார்கள்?

ஏழை குழந்தைகளுக்கு தரமான கல்வி வழங்கி வருகிறோம். தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தி உள்ளோம். டெல்லி முழுவதும் மொகல்லா மருத்துவமனைகளை திறந்துள்ளோம். அரசு மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை வழங்கப்படுகிறது.

ஒரு காலத்தில் டெல்லியில் 10 மணி நேர மின்வெட்டு அமலில் இருந்தது. இப்போது 24 மணி நேரமும் தடையின்றி மின் விநியோகம் வழங்குகிறோம். ஏழை குடும்பங்களுக்கு இலவசமாக மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. இந்த குற்றங்களுக்காகவே எங்களை சிறையில் தள்ளுகிறார்கள்.

ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணிக்கு ஆம் ஆத்மியின் மூத்த தலைவர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்துக்கு வருவார்கள். அவர்களோடு நானும் வருகிறேன்.

அப்போது பிரதமர் நரேந்திர மோடி விரும்பும் அனைவரையும் கைது செய்து சிறையில் தள்ளலாம். எங்களில் ஒரு தலைவரை கைது செய்து சிறையில் அடைத்தால் 100 ஆம் ஆத்மி தலைவர்கள் உருவெடுப்பார்கள்.

இவ்வாறு அர்விந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.