கோவில்பட்டி அருகே மின்னல் தாக்கி பெண் உயிரிழப்பு


உயிரிழந்த ஆச்சியம்மாள்

கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே மின்னல் தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் 14 ஆடுகள் உயிரிழந்தன.

கோவில்பட்டி அருகே வடக்கு திட்டங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சண்முகசுந்தரம் மனைவி ஆச்சியம்மாள் (63). இவர் ஆடுகளை வளர்த்து வந்தார். சனிக்கிழமை (மே 18) காலை வழக்கம் போல் ஆச்சியம்மாள் தனக்கு சொந்தமான 17 ஆடுகளை வடக்கு திட்டங்குளம் கண்மாய் அருகே உள்ள காட்டுப்பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார்.

இந்நிலையில், மாலையில் வீடு திரும்பும் போது பலத்த இடி மின்னலுடன் மழை பெய்தது. இதனால் ஆச்சியம்மாள், ஆடுகளுடன் அப்பகுதியில் இருந்த பழமையான கட்டிடத்தில் ஒதுங்கினார். அப்போது எதிர்பாராத விதமாக மின்னல் தாக்கியது. இதில் ஆச்சியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 14 ஆடுகளும் உயிரிழந்தன.

மழை நின்றதும் மீதம் இருந்த 3 ஆடுகள் மட்டும் வீட்டுக்கு சென்றன. இதனால் சந்தேகமடைந்த அவரது உறவினர்கள் ஆச்சியம்மாளை தேடி சென்றனர். அப்போது வடக்கு திட்டங்குளம் திருமலை நகர் பகுதியில் உள்ள பழைய கட்டிடத்தில் அவர் மின்னல் தாக்கி இறந்து கிடந்தது தெரியவந்தது.

தகவல் அறிந்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆச்சியம்மாள் சடலத்தை மீட்டு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், வட்டாட்சியர் சரவண பெருமாள் மற்றும் அதிகாரிகள் சென்று விசாரணை நடத்தினர்.