குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ல் தண்ணீர் திறக்க வாய்ப்பு குறைவு: வேளாண் துறை அமைச்சர் தகவல்


சென்னை: டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறப்பதற்கான வாய்ப்புகள் குறைவுஎன்று வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் கூறினார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் 30 முதல் 40 சதவீதம் பரப்பளவில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. கொப்பரை கொள்முதல் விலையைஉயர்த்த வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துவருகின்றனர்.

மேலும், கூடுதலாக கொப்பரை கொள்முதலுக்கு அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், கொப்பரை விலையை ரூ.8 உயர்த்திமத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், நாபெட் மூலம் அதிக அளவில் கொப்பரை கொள்முதல் செய்ய மத்திய அரசுஅனுமதி அளித்துள்ளது.

தமிழகத்தில் பயிர்களைப் பாதிக்கும் அளவுக்கு அடர் மழை பெய்யவில்லை. எனினும், பயிர் பாதிப்பு தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கடந்த மார்ச் மாதத்தில் பொள்ளாச்சி பகுதியில் தென்னை மரங்களில் நோய் பாதிப்பு கண்டறியப்பட்டது. நான் அதிகாரிகளுடன் சென்று, ஆய்வு மேற்கொண்டேன்.

மேலும், வேளாண் துறை அதிகாரிகள் மற்றும் வேளாண் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள, துறை அலுவலர்கள் ஆகியோர் கிராமங்களில் ஆய்வு மேற்கொண்டு, பாதிப்பு தொடர்பாக கணக்கெடுத்தனர்.

தமிழகத்தில் 91 ஆயிரம் ஹெக்டேர் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. திருப்பூர், தென்காசியில் நோய் பாதிப்பு அதிகமிருப்பதுகண்டறியப்பட்டு, ரூ.2.80 கோடியில், பழைய மரத்தை அகற்றிவிட்டு, புதிதாக நட 3 லட்சம் தென்னம் கன்றுகள் வழங்கப்பட்டன.

மரத்தை வெட்டி அகற்ற ஹெக்டேருக்கு ரூ.31 ஆயிரம் வீதம் இதுவரை ரூ.14 கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. தென்னை மரங்களைப் பராமரிக்க ரூ.4 கோடிக்கு உரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு தென்னைக்கு ரூ.36 கோடி நிதி ஒதுக்கி,நோய் தாக்குதலில் இருந்து பயிர்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

செம்மொழிப் பூங்காவுக்கு எதிரில், உலகத் தரத்திலான பூங்காஅமைக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாதம் பூங்கா திறக்கப்படும். மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வழக்கம்போல ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறப்பதற்கான வாய்ப்புகள், இந்த ஆண்டு மிகவும்குறைவாக உள்ளன. அணையின் தண்ணீர் வரத்து மற்றும் இருப்பைப் பொறுத்து மேட்டூர் அணை திறக்கப்படும்.

எனினும், குறுவை சாகுபடிக்குத் தேவையான விதைகள், இடுபொருள், உரங்கள் தேவையான அளவுக்கு உள்ளன. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

x