மோடியின் கூட்டணி ஆட்சி நிலைக்குமா என்பதை காலம் முடிவு செய்யும்: ப.சிதம்பரம் கருத்து


சென்னை செய்தியாளர்கள் சந்திப்பில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்

சென்னை: முதல்வராகவும், பிரதமராகவும் தனி நபராக ஆட்சி செய்தவர், கூட்டணி ஆட்சியில் நுழைகிறார். இந்த ஆட்சி நிலைக்குமா என்பதை காலம் முடிவு செய்யும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாஜகவுக்கு 372 இடங்கள், கூட்டணி கட்சிகளும் சேர்த்து 400 இடங்களை இலக்காகவைத்துக் கொண்டு தேர்தலை எதிர்கொண்டது. இறுதியில் பாஜக வெறும் 240 இடங்களும், கூட்டணி கட்சிகளோடு சேர்த்து 292 இடங்களையும் பெற்று மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது.

பொய் பிரச்சாரமாக, வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு. சொல்லிவைத்தார் போன்று எல்லோரும் 350 இடங்களில் வெற்றி பெறும் என ஊடகங்கள் கருத்து கணிப்பை வெளியிட்டன. ஏனென்றால் அதுஒருவரால் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டது. அதையும் மீறி இந்த நாட்டு மக்கள்பாஜகவுக்கு அடக்கத்தை கற்றுத் தந்துள்ளனர்.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் மின்னணு வாக்கு பதிவு இயந்திரத்தை நாங்கள்நிராகரிக்கவில்லை. விவிபாட் இயந்திரத்தில் அச்சாகி வெளியில் வரும் சின்னத்தை வாக்காளரே ஒரு பெட்டியில் போட வேண்டும் என்றஒரு சிறிய மாற்றத்தை செய்ய வேண்டும் என்றுதான் தெரிவித்திருந்தோம். இயந்திரத்தைப் பற்றி நாங்கள் குறை கூறியதில்லை.

இந்த தேர்தலில் தார்மீக வெற்றி காங்கிரஸுக்குத்தான். தார்மீக தோல்வி நரேந்திர மோடிக்கு. குஜராத் முதல்வராக 12 ஆண்டு,நாட்டின் பிரதமராக 10 ஆண்டு என மோடிக்குதன்னிச்சையாக ஆட்சியை நடத்திதான் பழக்கம். இப்போது கூட்டணி அரசாக அமைக்க வேண்டிய கட்டாயம். அது நிலையான ஆட்சியாக இருக்குமா, இல்லையா என்பதை காலம் முடிவு செய்யும். கூட்டணி அரசு அமைப்பது சாதாரண விஷயம் இல்லை. அந்த அனுபவம் காங்கிரஸூக்கு இருக்கிறது. மோடிக்கு அந்த அனுபவம் தொடங்குகிறது. எப்படி சமாளிக்கிறார் என்பதைப் பார்ப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

செய்தியாளர் சந்திப்பின்போது, கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் உடனிருந்தனர்.

தமிழக காங்கிரஸ் பொதுக்குழு கூட்டம்: இதற்கிடையே, தமிழக காங்கிரஸ் பொதுக்குழு கூட்டம் வரும் 11-ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற இருப்பதாக மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். கட்சியின் மேலிடப் பார்வையாளர் அஜோய்குமார் முன்னிலையில், மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடைபெற உள்ளது.

வரும் காலங்களில் தமிழகத்தில் பாஜக வளர்ச்சியை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்த கூட்டத்தில் முக்கிய ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.