தூத்துக்குடியில் வாக்கு எண்ணிக்கைக்கு விரிவான ஏற்பாடுகள்


தூத்துக்குடி: தூத்துக்குடி மக்களவை தொகுதியில் பதிவான வாக்குகள் நாளை (ஜூன் 4) எண்ணப்படுகின்றன. இதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தூத்துக்குடி தொகுதியின் எம்பி யார் என்பது நாளை தெரிந்துவிடும்.

66.88 சதவீதம்: தூத்துக்குடி மக்களவை தொகுதிக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதி நடைபெற்றது. இதில், 66.88 சதவீதம் வாக்குகள் பதிவாகின. தேர்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவு ஒப்புகை சீட்டு கருவி (விவிபாட்) ஆகியவை தூத்துக்குடி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள வஉசி பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் 6 பாதுகாப்பு அறைகளில் வைத்து சீல் வைக்கப்பட்டுள்ளன. கடந்த ஒன்றரை மாதத்துக்கு மேலாக இந்த இயந்திரங்கள் மூன்றடுக்கு பாதுகாப்புடன் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணிக்கை: இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது. இதற்காக வாக்கு எண்ணும் மையத்தில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள அலுவலர்கள், வேட்பாளர்களின் முகவர்கள், அதிகாரிகள் வருவதற்காக தனித்தனி பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. வேட்பாளர்களின் முகவர்களுக்கு சட்டப்பேரவை தொகுதி வாரியாக வெவ்வேறு வண்ணங்களில் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், வேட்பாளர்களின் முகவர்களுக்கு செல்போன் கொண்டுவரக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை சட்டப்பேரவை தொகுதி வாரியாக 6 அறைகளில் நடைபெறுகிறது. 6 அறைகளிலும் தலா 14 மேஜைகள் போடப்பட்டுள்ளன.

தூத்துக்குடி வாக்கு எண்ணும் மையத்தின் பிரதான நுழைவு வாயில் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீஸார். படம்: என்.ராஜேஷ்

21 சுற்றுகள்: தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டி ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கு 21 சுற்றுகளும், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், திருச்செந்தூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் ஆகிய 4 தொகுதிகளுக்கு 19 சுற்றுகளும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட பிறகு ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிக்கும் தலா 5 விவிபாட் கருவிகள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு, அதில் உள்ள ஒப்புகை சீட்டுகள் எண்ணப்படுகின்றன. மொத்தம் 30 விவிபாட் கருவிகளில் உள்ள ஒப்புகை சீட்டுகள் எண்ணப்படுகின்றன. ஒப்புகை சீட்டுகளை எண்ணிய பிறகே முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

தூத்துக்குடி வாக்கு எண்ணும் மையத்தில் வேட்பாளர்களின் முகவர்கள் சட்டப்பேரவை தொகுதி வாரியாக செல்வதற்கு தனித்தனி பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. படம்: என்.ராஜேஷ்

வெல்லப்போவது யார்?: தூத்துக்குடி மக்களவை தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி கருணாநிதி, அதிமுக சார்பில் ஆர்.சிவசாமி வேலுமணி, தமாகா சார்பில் எஸ்.டி.ஆர்.விஜயசீலன், நாம் தமிழர் கட்சி சார்பில் ஜா.ரொவினா ரூத் ஜேன் உள்ளிட்ட 28 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் யார் வெல்லப் போகிறார்கள் என்பது நாளை தெரியவரும்.

திமுக முன்னாள் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதியின் மகளும், திமுக தற்போதைய தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினின் சகோதரியுமான கனிமொழி கருணாநிதி இரண்டாவது முறையாக தூத்துக்குடி தொகுதியில் களம் காணுகிறார்.
கடந்த 2019 மக்களவை தேர்தலில் அப்போதைய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜனை எதிர்த்து போட்டியிட்ட கனிமொழி 3,47,209 வாக்குள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். தற்போது 2-வது முறையாக தூத்துக்குடி எம்பியாகும் முனைப்பில் அவர் களத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. முதலில் தபால் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கும். அதன் பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கும். எனவே, காலை 9 மணி முதல் முன்னணி நிலவரங்கள் தெரியவரும். யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்பது பிற்பகலில் தெரிந்துவிடும். ஆனால், இறுதி முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இரவு வரை ஆகலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.