பொன்னேரி | இரு வேறு சம்பவங்களில் மின்சாரம் பாய்ந்து 2 பேர் உயிரிழப்பு


பொன்னேரி: பொன்னேரி பகுதியில் இரு வேறு இடங்களில் மின்சாரம் பாய்ந்து 8 வயது சிறுவன், வடமாநில தொழிலாளி என இருவர் உயிரிழந்தனர். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள பழவேற்காடு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் மகன் ஹரீஷ்(8).

இவர், நேற்று முன்தினம் மாலை, வீட்டில் உள்ள மீன் தொட்டியில் கை வைத்து விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, மீன் தொட்டியில் அமைக்கப்பட்டுள்ள மோட்டாருக்கு செல்லும் மின்கம்பியில் கசிந்த மின்சாரம் ஹரீஷ் மீது பாய்ந்தது.

இதனால், ஹரீஷ் நிலை தடுமாறி மீன் தொட்டியினுள் விழுந்தார். உடனே ஹரீஷை மீட்டு, சிகிச்சைக்காக பழவேற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்களின் பரிசோதனையில், ஹரீஷ் ஏற்கெனவே இறந்தது தெரியவந்தது.

மற்றொரு சம்பவம்: பொன்னேரி அருகே சிறுவாபுரியில் உள்ள தனியார் பிளைவுட் தொழிற்சாலையில், 20-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில், ஒடிசாவை சேர்ந்த பில்பான்சிங் (26) கடந்த சில மாதங்களாக எலக்ட்ரீஷியனின் உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.

நேற்று முன்தினம் மாலை தொழிற்சாலையில் உள்ள தண்ணீர் ஏற்றும் பம்ப் பழுதானது. அதைப் பழுது நீக்கும் பணியில் பில்பான்சிங் ஈடுபட்டபோது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார்.

சிகிச்சைக்காக நல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்களின் பரிசோதனையில் பில்பான்சிங் ஏற்கெனவே உயிரிழந்தது தெரிய வந்தது. இச்சம்பவங்கள் குறித்து, திருப்பாலைவனம், ஆரணி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.