வாக்கு எண்ணிக்கை நடைமுறை குறித்து தேர்தல் அலுவலர்களுக்கு விளக்க வேண்டும்: தலைமை தேர்தல் அதிகாரிக்கு ஆர்.எஸ்.பாரதி கடிதம்


சென்னை: தபால் வாக்கு, மின்னணு இயந்திர வாக்கு எண்ணிக்கை தொடர்பான நடைமுறைகளை, மாவட்ட தேர்தல்அதிகாரிகள், தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவுக்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடிதம் எழுதியுள்ளார்.

மக்களவை பொதுத்தேர்தலுக் கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம்தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடர்பாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு, மாவட்ட தேர்தல் அதிகாரிகள், தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் அவ்வப்போது ஆலோசனை நடத்தி ஏற்பாடுகள் சரியாக இருக்கிறதா என்பதை ஆய்வு செய்து வருகிறார்.

இந்நிலையில் சத்யபிரத சாஹுவுக்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நேற்று அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதா வது: தேர்தல் விதிகளின்படி, தேர்தல்நடத்தும் அலுவலர்கள், வேட்பாளர்கள், வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கான கையேட்டில் வாக்கு எண்ணிக்கைக்கான நடைமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட வேண்டும். 30 நிமிடங்களுக்குப்பின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட வேண்டும். தபால் வாக்கு முடிவுகள் அறிவிக்கப்படும் முன்னர், மின்னணு இயந்திர இறுதிசுற்று முடிவுகள் அறிவிக்கப்படக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் இந்த நடைமுறையை பின்பற்றும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

ஆனால், சென்னை மாநகராட்சிஆணையர் சமீபத்தில் வெளியிட்டசெய்திக்குறிப்பில், தபால் வாக்குகள் இறுதியில் எண்ணப்படும் என்று தெரிவித்துள்ளார். இது சரியான நடைமுறை அல்ல. இந்த தகவல் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

எனவே, தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு தேர்தல் ஆணையத்தின் சரியான நடைமுறையை தெரிவிப்பதுடன், அனைத்து வேட்பாளர் களின் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் இந்த சரியான நடைமுறையை வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.