மதுபோதையில் ஒன்வேயில் காரை ஓட்டி வாகனங்கள் சேதம் - ஓட்டுநரையும், தோழியையும் தாக்கிய மக்கள் @ புதுச்சேரி


புதுச்சேரி: மதுபோதையில் ஒன்வேயில் போக்குவரத்து போலீஸார் நிறுத்தச்சொல்லியும் வேகமாக வாகனத்தை செலுத்தி எதிரே வந்த ஏராளமான வாகனங்களை சேதப்படுத்தியவரையும், அவரது பெண் தோழியையும் பிடித்த அடித்த பொதுமக்கள், காரை அடித்து நொறுக்கினர்.

காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் கமல்நாத் (23). டாட்டூ கடை வைத்துள்ளார். அவரது பெண் தோழி சந்தியாவுடன் காரில் இன்று மாலை புதுச்சேரி வந்துள்ளார். இந்திரா காந்தி சிக்னலில் இருந்து புதுச்சேரி நோக்கி வழக்கமான பாதையில் செல்லாமல், ஒன்வேயில் செல்லத் தொடங்கியுள்ளார். போக்குவரத்து போலீஸார் அதை பார்த்து வண்டியை நிறுத்தக் கூறினர். ஆனால் அவர் வேகமாக காரை ஓட்டத்தொடங்கினார். இதனால் எதிரே வந்த 25-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது மோது விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.

பின் தொடர்ந்து போக்குவரத்து போலீஸார் வருவதற்குள் அவர்களை விரட்டி சென்ற பொதுமக்கள், நெல்லித்தோப்பு சிக்னலில் காரை மடக்கி பிடித்தனர். இதனிடையே, விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்ப முயன்ற காரை ஓட்டிய கமல்நாத், அவரது தோழி சந்தியா ஆகியோரை பொதுமக்கள் சராமரியாக அடித்து உதைத்தனர்.

இந்நிலையில், தகவலறிந்த உருளையன்பேட்டை போலீஸார் அங்கு வந்து, இருவரையும் மீட்டு காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் கமல்நாத் மதுபோதையில் வகனம் ஓட்டியது தெரிந்தது. இதனிடையே விபத்தை ஏற்படுத்திய காரை பொதுமக்கள் அடித்து சூறையாடினர்.