மூளைச்சாவு அடைந்த கோவை குழந்தையின் இதயம் சென்னை குழந்தைக்கு பொருத்தம்


சென்னை: கோவையில் மூளைச்சாவு அடைந்த 10 மாத பெண் குழந்தையின் இதயம் தானமாக பெறப்பட்டு சென்னையை சேர்ந்த ஒரு வயது பெண் குழந்தைக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.

கோவையைச் சேர்ந்தவர் சரவணன். தனியார் நிறுவனத்தில் பயணியாற்றி வருகிறார். அவரது மனைவி தனியார் மருத்துவமனையில் செவிலியராக உள்ளார். இவர்களின் 10 மாதம் பெண் குழந்தை, விளையாடி கொண்டிருந்த போது கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. கோவை பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தையை பெற்றோர் அனுமதித்தனர். பல்துறை மருத்துவக் குழுவினர் தொடர் சிகிச்சை அளித்து வந்த நிலையில், குழந்தை மூளைச்சாவு அடைந்தது.

இதையடுத்து, குழந்தையின் இதயத்தை தானம் அளிக்க பெற்றோர் முன்வந்தனர். இதனை தொடர்ந்து குழந்தையின் உடலில் இருந்து இதயம் பாதுகாப்பாக அகற்றப்பட்டு, சென்னை அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த் கேர் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. மருத்துவமனையில் காத்திருந்த ஒருவயது பெண் குழந்தைக்கு இதயம் அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.

மருத்துவமனையின் இதயம் நுரையீரல் மாற்று சிகிச்சைத்துறை இயக்குநர் மருத்துவர் கே.ஆர்.பாலகிருஷ்ணன் மற்றும் இணை இயக்குநர் மருத்துவர் சுரேஷ் ராவ் ஆகியோர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டனர்.