மின் இணைப்பு துண்டிப்பு விவகாரம்: முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்


சென்னை: பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பதிவுசெய்யப்பட்ட வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு விழுப்புரம் நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. இப்பிரச்சினையால், ஐஏஎஸ் அதிகாரியான அவரது மனைவி பீலா வெங்கடேசன் பிரிந்து வாழ்கிறார்.

இந்நிலையில், சென்னை அடுத்த தையூரில் உள்ள தனது பங்களாவை ராஜேஷ்தாஸ் தனதுகட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டதாகவும், காவலாளியை தாக்கியதாகவும் போலீஸில் பீலா புகார் கொடுத்தார். அதன்பேரில், ராஜேஷ் தாஸ் மீது கேளம்பாக்கம் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இதற்கிடையே, பீலா அளித்த கடிதத்தின் அடிப்படையில் தையூர் பங்களாவில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் ஏற்கெனவே மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஜெ.சத்யநாராயண பிரசாத் முன்பு இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பீலா தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜரானார். அவர் தனது வாதத்தில் தெரிவித்ததாவது:

தையூர் பங்களாவுக்கான மின் இணைப்பு பீலாவின் பெயரில் உள்ளதால், மின் இணைப்பை தற்காலிகமாக துண்டித்து வைக்க அவருக்கு முழு உரிமை உள்ளது. எனவே, இதை எதிர்த்து ராஜேஷ்தாஸ் தொடர்ந்துள்ள வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்.நிலத்தின் ஒரு பகுதி பீலாவின் தந்தை வெங்கடேசன் பெயரில் இருந்தது. அதை தனது பெயருக்கு மாற்றிய பீலா தற்போது குழந்தைகளின் பெயருக்கு மாற்றியுள்ளார்.

ராஜேஷ் தாஸுக்கு சொந்தமாகநுங்கம்பாக்கத்தில் ஒரு வீடு உட்படபல இடங்களில் சொத்துகள் உள்ளன. இதனால், அவர் அங்கு சென்று தங்கிக் கொள்ளலாம். இவ்வாறு அவர் வாதிட்டார். இதையடுத்து, வழக்கு விசாரணையை ஜூன் 3-ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

x