தமிழ் மாநில காங்கிரஸில் இருந்து மாநில நிர்வாகி விலகல்: பாஜக செயல்பாடுகளுக்கு கண்டனம்


ஈரோடு: தமாகா மாநில தேர்தல்முறையீட்டுக் குழு உறுப்பினர் மற்றும்நாமக்கல் மாவட்டப் பொறுப்பாளராக இருந்த ஈரோடு சி.கவுதமன், கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்ட இளைஞர்காங்கிரஸ் தலைவர் பதவியில் தொடங்கி, தமாகாவில் மூப்பனார் மற்றும் வாசனுடன் இணைந்து செயல்பட்ட அவர், பிரதமர் மோடி குறித்தும், பாஜக குறித்தும் தனது முகநூல் பக்கத்தில் விமர்சனம் செய்துள்ளார்.

இதுகுறித்து கவுதமன் கூறும்போது, "சாதி, மதம் பார்க்காமல் காங்கிரஸ் கட்சியில் செயல்பட்டு வந்த என் போன்றோருக்கு, பாஜகவுடன், தமாகா இணைந்து செயல்படுவதை ஏற்க முடியவில்லை. தேர்தல் நேரத்தில் ஈரோடுதொகுதி தமாகாவுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், அப்போது கட்சியிலிருந்து வெளியேறி, தர்மசங்கடத்தைக் கொடுக்க விரும்பவில்லை.

தற்போதுகூட தலைவர் ஜி.கே.வாசனிடம் எனது விலகலைச் சொல்லி விட்டுத்தான், இந்த அறிவிப்பை வெளியிட்டேன். தமாகாவில் என்னைப் போன்றே பலரும் மனக்கசப்பில் உள்ளனர். அதன் பிரதிபலிப்பு எதிர்காலத்தில் தெரியும்" என்றார்.