வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க தமிழகத்துக்கு 58 பார்வையாளர்கள்: தேர்தல் ஆணையம் உத்தரவு


சென்னை: தமிழகத்தில் ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை பணிகளை கண்காணிக்க கூடுதலாக 19 பேர் என 58 பார்வையாளர்களை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் மக்களவை பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. தமிழகத்தின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தொகுதிக்கு முதல்கட்டமாக கடந்த ஏப்ரல் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதுவரை 6 கட்ட தேர்தல்கள் முடிந்துள்ள நிலையில், இறுதி மற்றும் 7-வது கட்ட தேர்தல் நாளை (ஜூன் 1) நடைபெறுகிறது.

தேர்தல் ஆணையம் ஏற்கெனவே அறிவித்தபடி, அனைத்து தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கைக்கான தேர்தல் பார்வையாளர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமித்துதேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடந்தபோது, தொகுதிக்கு ஒருவர்என 39 தேர்தல் பொது பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில், தற்போது, வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு கூடுதலாக 19 பார்வையாளர்கள் என 58 பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ளது.

குறிப்பாக தென்சென்னை, வடசென்னை, மத்திய சென்னை தொகுதிகளுக்கு தலா 2 பேர்நியமிக்கப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி மக்களவைத் தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் வாக்குஎண்ணிக்கை நடைபெற உள்ளதால், அங்கு 3 பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தின் 39 தொகுதிகளுக்கும் 234 சட்டப்பேரவை தொகுதி வாரியாக தனித்தனி அறைகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதற்காக 3,300 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து சட்டப்பேரவை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை அறைகளிலும் தேர்தல் நடத்தும் அலுவலரே கண்காணிக்க முடியாது என்பதால், ஏற்கெனவே 468உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் கூடுதலாக 349பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தலைமை தேர்தல்அதிகாரி சத்யபிரத சாஹு கூறும்போது, ‘‘500 தபால் வாக்குகளுக்கு ஒரு மேஜை என்ற அளவில் பிரிக்கப்பட்டு, அதற்கு ஒருஉதவி தேர்தல் நடத்தும் அலுவலர்ஏற்கெனவே நியமிக்கப்பட்டுள்ளார். கூடுதல் தபால் வாக்குகள் இருந்து, அதற்கு ஒரு மேஜை உருவாக்கப்பட்டாலோ, கூடுதலாக வேறு அறையில் தபால் வாக்குஎண்ணிக்கை நடந்தாலோ, அதற்குஏற்ப உதவி தேர்தல் நடத்தும்அலுவலர்கள் நியமிக்கப்படுகின்றனர். இதுகுறித்து அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரி முடிவெடுப்பார். அதன் அடிப்படையில் தற்போதுகூடுதலாக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்’’ என்றார்.

அதிகாரிகளுடன் ஆலோசனை: இதற்கிடையே, தேர்தல் நடந்து முடிந்த மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் இந்தியதேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆலோசனை நடத்தினார். அப்போது, வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். இக்கூட்டத்தில், காணொலி வாயிலாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரிசத்யபிரத சாஹுவும் கலந்துகொண்டார்.

இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடுகள் தொடர்பாக, மாவட்ட தேர்தல் அலுவலர்கள், தேர்தல் நடத்தும் அதிகாரிகளுடன் சத்யபிரத சாஹு நேற்றுஆலோசனை நடத்தினார். அப்போது பல்வேறு அறிவுறுத்தல்களை அவர் வழங்கினார்.

x