டெல்லி நிறுவனத்தின் ரூ.290 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கியது அமலாக்கத் துறை


புதுடெல்லி: டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு இன்டர்நேஷனல் அமுஸ்மென்ட் நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனம் சார்பில் ஹரியாணாவின் குருகிராம் நகரின் முக்கிய பகுதிகளில் கடைகள் அமைத்து தருவதாக 1,500 பேரிடம் ரூ.400 கோடி வசூல் செய்யப்பட்டது. ஆனால் வாக்குறுதி அளித்தபடி முதலீட்டாளர்களுக்கு கடைகள் அமைத்து தரப்படவில்லை.

இந்த மோசடி தொடர்பாக அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது. அப்போது இந்நிறுவனம், முதலீட்டாளர்களிடம் பெற்ற ரூ.400 கோடியை சொந்த பயன்பாட்டுக்கு செலவிட்டிருப்பது தெரியவந்தது.இதைத் தொடர்ந்து அந்த நிறுவனத்துக்கு சொந்தமான வணிக வளாகங்கள், 218 ஏக்கர் நிலம் உட்பட ரூ.290 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கி உள்ளது.