புழல் மத்திய சிறையில் கைதிகள் கேண்டீன் மூடப்படவில்லை: உயர் நீதிமன்றத்தில் சிறைத்துறை தகவல்


சென்னை: சென்னை புழல் மத்திய சிறையில் செயல்பட்டு வந்த கைதிகளுக்கான கேண்டீன் மூடப்படவில்லை என சிறைத் துறை நிர்வாகம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை புழல் மத்திய சிறையில் கடந்த 11 ஆண்டுகளாக விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டுள்ள எஸ்.பக்ருதீன், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘புழல் மத்திய சிறையில் கைதிகளுக்காக செயல்பட்டு வந்த கேண்டீன் திடீரென கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளது.

இதனால் கைதிகள் அடிப்படை உணவு தேவைகளுக்கும். அத்தியாவசியப் பொருட்களுக்கும் சிரமப்படுகின்றனர். மேலும், கைதிகள் மன உளைச்சலுக்கும் ஆளாகி வருகின்றனர். எனவே மூடப்பட்டுள்ள கேண்டீனை மீண்டும் திறக்க உத்தரவிட வேண்டும்’’ என கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜெ.சத்யநாராயண பிரசாத், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் எஸ்.நதியா ஆஜராகி, ‘‘கேண்டீன் மூடப்பட்டதால் மனுதாரரைப் போல பலர் அவதியடைந்து வருகின்றனர். கேண்டீனை திறக்கக் கோரி மனு அளித்தும் பரிசீலிக்கப்படவில்லை’’ என்றார்.

சிறைத் துறை நிர்வாகம் சார்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் இ.ராஜ் திலக், ‘‘கைதிகளுக்கான கேண்டீன் மூடப்படவில்லை. இருப்பினும் தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்படும்’’ என தெரிவித்தார்.

இதையடுத்து, இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூன் 12-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.

x