நாட்டின் விளையாட்டு தலைநகரமாக மாறி வரும் தமிழகம்: அரசு பெருமிதம்


சென்னை: சர்வதேச, தேசிய போட்டிகளை நடத்தியதன் மூலம் நாட்டின் விளையாட்டு தலைநகராக தமிழகம் மாறி வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த 3 ஆண்டுகளில் சிறப்பான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதால் விளையாட்டுத் துறையிலும் தமிழகம், இந்தியா மட்டுமின்றி, உலகெங்கிலும் சிறந்து விளங்கும் நாடுகளும் உற்று நோக்கப்படுவதுடன், பாராட்டுகளையும் பெற்றுள்ளது. முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின், கடந்த 3 ஆண்டுகளில் இத்துறைக்கு ரூ.1,000 கோடிக்கு மேல் வழங்கியுள்ளார்.

இதன்பயனாக, தமிழ்நாடுவிளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து நவீன விளையாட்டு அரங்கம் மற்றும் மாவட்ட விளையாட்டு அரங்கங்கள் ரூ.30 கோடியில் புனரமைக்கப்பட்டு வருகின்றன. அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் முதல்வரின் சிறுவிளையாட்டரங்கங்கள் திட்டத்தில்,முதற்கட்டமாக, 10 சட்டப்பேரவை தொகுதிகளில், தடகளம், கால்பந்து, கூடைப்பந்து, கைப்பந்து, கபடி போன்ற பிரபலமான 5 முக்கிய விளையாட்டுகளுக்கான மைதான வசதிகளுடன் கூடிய விளையாட்டரங்கங்கள் தலா ரூ.3 கோடியில் அமைக்கப்பட்டு வருகிறது.

அதேபோல், விளையாட்டுத் துறையை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் வகையில், சென்னையில் உலகத்தரத்திலான விளையாட்டு நகரம் ஒன்றை அமைக்க பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் தடகளம், நீச்சல், டென்னிஸ், ஹாக்கி, ஸ்குவாஷ் விளையாட்டுகளில் 81 புதிய வெளிநாட்டு பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சர்வதேச, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழகத்தின் 2,738 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மற்றும் மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு உயரிய ஊக்கத் தொகையாக ரூ.87.61 கோடியை முதல்வர் வழங்கியுள்ளார்.

சென்னையில், முதல்முறையாக தமிழக அரசும், இந்திய சதுரங்கக் கூட்டமைப்பும் இணைந்து ரூ.114 கோடி செலவில், உலகப் புகழ் பெற்ற 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை மாமல்லபுரத்தில் நடத்தியது. இதன்மூலம் சென்னை, உலகின் முன்னணி விளையாட்டு நகரம் என புகழ் கொடி நாட்டியது.

தொடர்ந்து, கடந்த 2022-ல் சர்வதேச மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி, ஏடிபி சேலஞ்சர் 100 சர்வதேச ஆண்கள் டென்னிஸ் போட்டி, ஸ்குவாஷ் உலகக் கோப்பை, சென்னை செஸ் கிராண்ட்மாஸ்டர் போட்டி, ஆசிய ஆடவர்ஹாக்கி சாம்பியன்ஷிப், உலகளவில் புகழ்பெற்ற சர்வதேச அலைசறுக்குப் போட்டி, கேலோ இந்தியாஇளைஞர் விளையாட்டுப் போட்டி, முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டி ஆகிய போட்டிகள் தமிழகத்தில் நடத்தப்பட்டன.

அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் கண்டறியப்பட்ட பணியிடங்களில் திறமையானவிளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீதஇடஒதுக்கீட்டின் கீழ் 13 வீரர்கள்பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். முன்னாள் முதல்வர் கருணாநிதிநூற்றாண்டை முன்னிட்டு, ரூ.86 கோடியில், முதல்கட்டமாக 420கிராம பஞ்சாயத்துகளுக்கு 546 விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு ஜனவரியில் டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின முகாமில், என்சிசி தமிழ்நாடு இயக்குநரகம் ஒட்டுமொத்தமாக 2-வது இடத்தையும் இந்த ஆண்டில் 3-வது இடத்தையும் பெற்றுப் புகழ் ஈட்டியது. இத்தகைய செயல்பாடுகளால் தமிழகம் இந்தியாவின் விளையாட்டு தலைநகராக மாறி வருகிறது.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.