நாளை முதல் வெப்பநிலை குறையும்; 9 மாவட்டங்களில் ஜூன் 1, 2-ல் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் 


சென்னை: நாளை முதல் வெப்பநிலை குறையும், ஜூன் 1, 2-ம் தேதிகளில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வுமைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் இன்று (மே 30) ஓரிரு இடங்களிலும், மே 31, ஜூன்1, 2-ம் தேதிகளில் ஒருசில இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக ஜூன் 1, 2-ல்கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், சேலம், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், திருச்சி மற்றும் நாமக்கல்மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேற்கூறிய நாட்களில் புதுச்சேரி, காரைக்காலிலும் மழைக்கு வாய்ப்புள்ளது. நாளை (மே 31)முதல் ஜூன் 2 வரை அதிகபட்சவெப்பநிலை சற்று குறைந்து இயல்பை ஒட்டியும், இயல்பைவிட சற்று அதிகமாகவும் இருக்கக்கூடும்.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி: தென்தமிழகப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை இன்று தொடங்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகரில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 105 டிகிரியை ஒட்டி இருக்கும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: குமரிக்கடல் பகுதிகள், மன்னார்வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப் பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகள், தெற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல், தென்கிழக்கு வங்கக்கடல், மாலத்தீவு, லட்சத்தீவு, தெற்குகேரள கடலோரப் பகுதிகளில் இன்றும் நாளையும் மணிக்கு 55 முதல் 65 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்.

தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லாறில் 5 செமீ மழை பதிவானது. அதிகபட்ச வெப்பநிலையாக சென்னை மீனம்பாக்கத்தில் 106 டிகிரி பாரன்ஹீட் பதிவானது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.