தூத்துக்குடியில் பிஎஸ்என்எல் 4ஜி சேவை தொடக்கம்: பழைய சிம்களை இலவசமாக மாற்றிக் கொள்ளலாம்


சொக்கன்குடியிருப்பு பிஎஸ்என்எல் 4ஜி டவர் பகுதியில் நடைபெற்ற 4ஜி சேவை தொடக்க விழாவில் தூத்துக்குடி பிஎஸ்என்எல் பொதுமேலாளர் எஸ்.கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி: பிஎஸ்என்எல் தனது 4ஜி சேவையை தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று தொடங்கியது. சாத்தான்குளம் அருகேயுள்ள சொக்கன் குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முதலாவது 4ஜி டவரை பிஎஸ்என்எல் தமிழ்நாடு பொதுமேலாளர் டி.தமிழ் மணி இன்று காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்து சேவையை தொடங்கி வைத்தார்.

பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் சார்பில் தமிழகத்தில் 4ஜி சேவை படிப்படியாக தொடங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பிஎஸ்என்எல் 4ஜி சேவை தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று தொடங்கப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல் சார்பில் முதலாவது 4ஜி டவர் சாத்தான்குளம் அருகேயுள்ள சொக்கன்குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு இன்று நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி பிஎஸ்என்எல் பொதுமேலாளர் எஸ்.கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார். கொம்மடிக்கோட்டை ஊராட்சித் தலைவர் ஜே.ராஜ புனிதா முன்னிலை வகித்தார். பிஎஸ்என்எல் தமிழ்நாடு பொதுமேலாளர் டி.தமிழ்மணி காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டு 4ஜி டவரை மக்களுக்கு அர்பணித்து வைத்து பிஎஸ்என்எல் 4ஜி சேவையை தொடங்கி வைத்தார்.

பின்னர் தூத்துக்குடி பிஎஸ்என்எல் பொதுமேலாளர் எஸ்.கிருஷ்ணகுமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தூத்துக்குடி மாவட்டத்தில் திறன் மேம்படுத்தப்பட்ட 4ஜி சேவையை பிஎஸ்என்எல் தொடங்கியுள்ளது. இதன் மூலம் தூத்துக்குடி மாவட்ட மொபைல் வாடிக்கையாளர்களுக்கு பெரிய அளவில் பயன் கிடைக்க இருக்கிறது. தற்போதைய நெட்வொர்க்கின் டேட்டா வேகம் மற்றும் தரம் வரும் நாட்களில் நான்கு முதல் ஐந்து மடங்கு அதிகரிக்கப்படவுள்ளது. உள் நாட்டிலேயே தயாரான இந்த 4ஜி தொழில் நுட்பத்தை செயல்படுத்துவதற்கு முதல் கட்டமாக திருச்செந்தூர் சொக்கன் குடியிருப்பு பகுதியில் பிஎஸ்என்எல் தனது முதல் 4ஜி டவரை நிர்மாணித்துள்ளது. அடுத்த கட்டமாக கோவில்பட்டி, கயத்தாறு பகுதிகளில் 4ஜி சேவையை விரிவாக்கம் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

படிப்படியாக தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 4ஜி சேவை வழங்கப்படும். பிஎஸ்என்எல் மொபைல் டேட்டா வேகம் போட்டியாளர்களை மிஞ்சும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொழில் நுட்ப மேம்படுத்தலில் முக்கிய அம்சம் அனைத்து டவர்களும் 5ஜி திறன் கொண்டதாக இருக்கும் என்பதாகும். மேலும், மென்பொருள் மேம்படுத்தல் மூலம் 5ஜி சேவைக்கு எளிதாக மாற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், வாடிக்கையாளர்ரகள் எந்தவித கட்டண மாற்றமும் இல்லாமல் 3ஜி கட்டணத்திலேயே 4ஜி சேவையை பெறலாம். தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் கூடுதலாக 26 புதிய 4ஜி டவர்களை அமைக்க திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் பிஎஸ்என்எல் மொபைல் கவரேஜ் மேலும் மேம்படுத்தப்படும்.

மொபைல் நெட்வொர்க் செயல்பாடு மற்றும் பிற இயக்க அளவீடுகளின் அடிப்படையில் தூத்துக்குடி பிஎஸ்என்எல் இந்திய அளவில் சிறந்த இடத்தைப் பிடித்துள்ளது. தற்போது புதிதாக திட்டமிடப்பட்டுள்ள நெட்வொர்க் மேம்படுத்துதல் மற்றும் விரிவாக்கம் முடிந்ததும் பிஎஸ்என்எல் மொபைல் வாடிக்கையாளர்களின் பயன்பாட்டு அனுபவமும், சேவையின் தரமும் சிறப்பாக இருக்கும். பிஎஸ்என்எல்-ன் இந்த மேம்படுத்தப்பட்ட 4ஜி சேவையை பெறுவதற்கு தற்போது பிஎஸ்என்எல் 2ஜி, 3ஜி சிம்களை வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் அருகில் உள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையங்கள், பிரான்சைசி அலுவலகங்கள் மற்றும் மேளா நடைபெறும் இடங்களில் கட்டணமின்றி இலவசமாக பிஎஸ்என்எல் 4ஜி சிம்களாக மாற்றிக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்றார்.