சேகரித்த கழிவுகளை கால்வாயில் கொட்டிய செப்டிக் டேங்க் லாரி - மதுரை போலீஸ் வழக்குப் பதிவு


மதுரை: மதுரை மாநகராட்சி பகுதிகளில் சேகரிக்கும் கழிவுநீரை அகற்ற மதுரையைச் சேர்ந்த தனியார் செப்டிக் டேங்க் நிறுவனத்துக்கு மாநகராட்சி நிர்வாகம் ஒப்பந்த அடிப்படையில் அனுமதி வழங்கியுள்ளது.

இந்த் நிறுவனத்திற்கு சொந்தமான செப்டிக் டேங்க் லாரிகள் மாநகராட்சி குடியிருப்பு பகுதிகள் மற்றும் பொது இடங்களில் கழிவுநீரை உறிஞ்சி எடுத்து, மாநகராட்சியால் அனுமதிக்கப்பட்ட வெள்ளக்கல் போன்ற இடங்களில் கொட்ட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்தத் தனியார் செப்டிக் டேங்க் லாரிகள் சேகரிக்கும் கழிவுகளை ஆங்காங்கே மழை நீர் வடிகால்கள், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கால்வாய்கள், காலியிடங்களில் கொட்டுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன.

வண்டியூர் மற்றும் அப்பகுதியில் கழிவு நீர், செப்டிக் டேங்க நீரை சேகரிக்கும் சில தனியார் செப்டிக் டேங்க் லாரிகளும் வண்டியூர் கண்மாய் உபரி நீர் செல்லும் பொதுப்பணித் துறை கால்வாய் மற்றும் அதையொட்டி குடியிருப்புகள் அருகிலுள்ள காலி இடங்களில் தொடர்ந்து கழிவு களை கொட்டுகின்றன.

இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனிடையே மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் பின்புறம், மீன் மார்க்கெட் பகுதியிலுள்ள மழைநீர் வடிகாலில் தொடர்ச்சியாக கழிவு நீர், கழிவுகளை கொட்டுவதாக புகார் எழுந்த நிலையில், செப்டிக் டேங்க் லாரி ஒன்று கழிவு நீரை மீன் மார்க்கெட் பகுதியிலுள்ள மழை நீர் வாய்காலில் கொட்டும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையானது.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட லாரி உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இந்த வீடியோ வெளியானதன் எதிரொலியாக மதுரை மாநகராட்சி உதவிப் பொறியாளர் ரிச்சர்டு பால் கொடுத்த புகாரின் அடிப்படையில் மாட்டுத்தாவணி போலீஸார் வைகை செப்டிங் டேங்க் லாரி உரிமையாளர் மற்றும் ஓட்டுநர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.