இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் புதிய இயக்குநராக சி.ஜி.கர்ஹாதர் நியமனம்


இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் புதிய இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள சி.ஜி.கர்ஹாதர்.

கல்பாக்கம்: கல்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் வெங்கட்ராமன் பணி ஓய்வு பெறுவதால், புதிய இயக்குநராக சி.ஜி.கர்ஹாதர் நியமிக்கப்பட்டுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் பகுதியில் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் மற்றும் சென்னை அணுமின் நிலையம் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் அணு மின் நிலையம் மற்றும் அணு ஆராய்ச்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், முதன்மையாக கருதப்படும் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் பதவி வகிப்பவர் முக்கிய பணிகளை மேற்கொள்வார். தற்போது அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராக வெங்கடராமன் என்பவர் பதவி வகித்து வருகிறார்.

இவரது பணிக்காலம் மே மாதம் 31-ம் தேதியுடன் நிறைவுபெறுகிறது. இதனால், புதிய இயக்குநர் நியமிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதன்பேரில்,
பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் ஒரு பிரிவில் இயக்குநராக உள்ள சி.ஜி.கர்ஹாதர் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் புதிய இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஜூன் மாதம் 1-ம் தேதி புதிய இயக்குநராக பொறுப்பேற்பார் எனத் தெரிகிறது.

புதிய இயக்குநர் பொறுப்பேற்றதும் கல்பாக்கம் மற்றும் சுற்றுப்புற கிராம மக்களின் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பரிசீலித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வார் என உள்ளூர் மக்கள் கருதுகின்றனர்.