USA vs PAK | சூப்பர் ஓவரில் அசத்தல்; யார் இந்த சவுரப் நேத்ராவால்கர்? @ T20 WC


டல்லாஸ்: 32 வயதான சவுரப் நேத்ராவால்கர், மும்பையில் பிறந்தவர். 2008-09ம் ஆண்டில் கூச் பெஹர் டிராபியில் 6 ஆட்டங்களில் 30 விக்கெட்கள் வீழ்த்தி கவனத்தை ஈர்த்தார். தொடர்ந்து 2010-ம் ஆண்டு நடைபெற்ற யு-19 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்காக விளையாடினார். அந்த தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான கால் இறுதி ஆட்டத்தில் இந்தியா தோல்வி அடைந்திருந்தது. இந்த ஆட்டத்தில் நேத்ராவால்கர் 5 ஓவர்கள் வீசி 16 ரன்களை வழங்கி ஒரு விக்கெட் கைப்பற்றியிருந்தார்.

இந்த தொடரில் அவர், 9 விக்கெட்கள் கைப்பற்றியிருந்தார். இந்த செயல் திறனால் மும்பை சீனியர் அணியிலும், ஐபிஎல் தொடரிலும் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என நேத்ராவால்கர் நம்பியிருந்தார். ஆனால் அஜித் அகர்கர், ஜாகீர் கான், அவிஷ்கர் சால்வி, தவால் குல்கர்னி ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருந்ததால் நேத்ராவால்கர் மும்பை அணிக்குள் நுழைவதை கடினமாக்கியது.

இந்த காலக்கட்டத்தில் நேத்ராவால்கர், கணினி பொறியியலில் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்தார். மும்பை அணிக்காக விளையாடும் வாய்ப்புகள் குறைவாகவே கிடைத்ததால், உயர் படிப்பைத் தொடர முடிவு செய்தார். இதற்காக 2015-ம் ஆண்டு நியூயார்க்கில் உள்ள கார்னெல் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பில் சேர்ந்தார்.

தொடர்ந்து சான்பிரான்சிஸ்கோவில் ஆரக்கிள் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. பின்னர், அங்கேயே வார இறுதிகளில் பொழுதுபோக்கிற்காக கிரிக்கெட்விளையாடத் தொடங்கினார். இதையடுத்து 2018-ம் ஆண்டு அமெரிக்காவிற்காக லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அறிமுகமானார். தொடர்ந்து அடுத்த ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் அமெரிக்க அணிக்காக விளையாடத் தொடங்கினார்.

இதன் தொடர்ச்சியாக கடந்த ஆண்டு அமெரிக்காவில் அறிமுகமான மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் வாஷிங்டன் அணிக்காக விளையாடினார். மேலும் ஐஎல்டி 20 லீக், கரீபியன் லீக்கிலும் பங்கேற்றார். தற்போது டி 20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக அமெரிக்க அணி வரலாற்று சாதனை வெற்றியை பதிவு செய்ததில் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ‘ஏ’ பிரிவில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான பாகிஸ்தான் அணியை சூப்பர் ஓவரில் வீழ்த்தியது அறிமுக அணியான அமெரிக்கா.

அமெரிக்காவில் டல்லாஸ் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணியை 7 விக்கெட்கள் இழப்புக்கு 159 ரன்கள் என்ற நிலையில் மட்டுப்படுத்தினர் அமெரிக்க அணியின் பந்து வீச்சாளர்கள். 4.4 ஓவர்களில் 26 ரன்களுக்கு 3 முக்கிய விக்கெட்களை இழந்து பாகிஸ்தான் அணி பரிதவித்தது. முகமது ரிஸ்வான் 9, உஸ்மான் கான் 3, பஹர் ஸமான் 11 ரன்களில் நடையை கட்டினர். கேப்டன் பாபர் அஸம் 43 பந்துகளில் 44 ரன்களும், ஷதப் கான் 25 பந்துகளில் 40 ரன்களும், ஷாகீன் ஷா அப்ரிடி 16 பந்துகளில் 23 ரன்களும் சேர்த்ததால் கவுரவமான ஸ்கோரை பெற முடிந்தது.

பாகிஸ்தான் அணியை பெரிய அளவில் ரன்குவிக்கவிடாமல் கட்டுப்படுத்தியதில் இடது கை சுழற்பந்து வீச்சாளரான நாஸ்துஷ் கென்ஜிகேவும், இடது கை வேகப்பந்து வீச்சாளரான சவுரப் நேத்ராவால்கரும் முக்கிய பங்குவகித்தனர். கென்ஜிகே 3 விக்கெட்களையும், சவுரப் நேத்ராவால்கர் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 160 ரன்கள் இலக்குடன் பேட் செய்த அமெரிக்க அணி 13 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 104 ரன்கள் சேர்த்து வலுவான நிலையில் இருந்தது.

14-வது ஓவரை வீசிய ஹரிஸ் ரவூப், ஆண்ட்ரிஸ் கவுஸை போல்டாக்கி திருப்பு முனையை ஏற்படுத்திக் கொடுத்தார். ஆண்ட்ரிஸ் கவுஸ் 26 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5 பவுண்டரியுடன் 35 ரன்கள் சேர்த்தார். சிறப்பாக விளையாடி வந்த கேப்டன் மோனங்க் படேல் 38 பந்துகளில், ஒரு சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் எடுத்த நிலையில் முகமது அமீர் வீசிய அடுத்த ஓவரில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். ஆரோன் ஜோன்ஷ், நிதிஷ் குமார் ஆகியோர் களத்தில் நின்ற நிலையில் கடைசி 5 ஓவர்களில் அமெரிக்க அணியின் வெற்றிக்கு 45 ரன்கள் தேவையாக இருந்தது. ஷதப் கான் வீசிய 16-வது ஓவரில் ஆரோன் ஜோன்ஸ் சிக்ஸர் விளாச இந்த ஓவரில் 11 ரன்கள் சேர்க்கப்பட்டது.

நசீம் ஷா அடுத்த ஓவரை நெருக்கமாக வீச அமெரிக்க அணியால் 6 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ஷாகீன் ஷா அப்ரிடி 18-வது ஓவரில் 7 ரன்களையும், அடுத்த ஓவரில் முகமது அமிர் 6 ரன்களையும் வழங்கினர். ஹரிஸ் ரவூப் வீசிய கடைசி ஓவரில் அமெரிக்க அணியின் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தில் நிதிஷ் குமார் ஒரு ரன் சேர்க்க அடுத்த பந்தை ஆரோன் ஜோன்ஸ் மிட் ஆஃப் திசையில் விளாசிய போது ஷாகீன் ஷா அப்ரிடி கேட்ச்சை கோட்டைவிட ஒரு ரன் சேர்க்கப்பட்டது. அடுத்த பந்திலும் ஒரு ரன் எடுக்கப்பட்டது.

3 பந்துகளில் 12 ரன்கள் தேவை என்ற நிலையில் புல்டாஸாக வீசப்பட்ட பந்தை ஆரோன் ஜோன்ஸ் சிக்ஸருக்கு பறக்கவிட்டார். 5-வது பந்தில் ஒரு ரன் சேர்க்கப்பட்டது. ஒரு பந்தில் 5 ரன் தேவை என்ற நிலையில் நிதிஷ் குமார் மிட் ஆஃப் திசையை நோக்கி பந்தை தூக்கி அடிக்க பவுண்டரி கோட்டை கடந்தது. முடிவில் 20 ஓவர்களில் அமெரிக்க அணி 3 விக்கெட்கள் இழப்புக்கு 159 ரன்கள் சேர்க்க ஆட்டம் ’டை’ ஆனது. ஆரோன் ஜோன்ஸ் 36 ரன்களும், நிதிஷ் குமார் 14 ரன்களும் சேர்த்தனர்.

இதையடுத்து வெற்றியை தீர்மானிக்க சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது. இதில் முதலில் பேட் செய்த அமெரிக்க அணி முகமது அமிர் வீசிய ஓவரில் 18 ரன்கள் குவித்தது. ஆரோன் ஜோன்ஸ் ஒரு பவுண்டரியுடன் 9 ரன்கள் சேர்த்தார். முகமது அமிர் உதிரிகள் வாயிலாக 7 ரன்களை தாரை வார்த்திருந்தார். 19 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 13 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. சவுரப் நேத்ராவால்கர் வீசிய ஓவரின் முதல் பந்தை வீணடித்த இப்திகார் அகமது அடுத்த பந்தை பவுண்டரிக்கு விரட்டிய நிலையில் 3-வது பந்தை லாங் ஆஃப் திசையில் விளாசிய போது மிலிந்த் குமாரின் அபாரமான கேட்ச்சால் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து ஷதப் கான் களமிறங்க அடுத்த 3 பந்துகளில் 7 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதனால் கடைசி பந்தில் 7 ரன்கள் தேவை என்ற நிலை உருவானது. சிக்ஸர் அடித்தால் மீண்டும் சூப்பர் ஓவருக்கு ஆட்டம் செல்லக்கூடும் என்ற நிலையில் ஷதப் கானால் ஒரு ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் அமெரிக்கா அணி 2-வது வெற்றியை பதிவு செய்தது.

அந்த அணி தனது முதல் ஆட்டத்தில் கனடாவை வென்றிருந்தது. 2 வெற்றிகளின் மூலம் அமெரிக்க அணி 4 புள்ளிகளுடன் ‘ஏ’ பிரிவில்முதலிடத்தில் உள்ளது. தனது அடுத்த ஆட்டத்தில் வரும் 12-ம் தேதி இந்தியாவுடன் அமெரிக்க அணி மோதுகிறது. அதேவேளையில் பாகிஸ்தான் தனது அடுத்த ஆட்டத்தில் நாளை (9-ம் தேதி) இந்திய அணியை எதிர்கொள்கிறது.

x