அலட்சியமே தோல்விக்கு காரணம்: பாக். கேப்டன் பாபர் அஸம் @ T20 WC


கராச்சி: ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் அமெரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வி அடைந்தது குறித்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அஸம் கூறியதாவது:

ஐசிசி-யின் உறுப்பு நாடுகளைச் சேர்ந்த அணிக்கு எதிராக விளையாடும் போது ஊக்கம் குறைவாகவும், விஷயங்களை கொஞ்சம் லேசாகவும் எடுத்துக்கொள்கிறார்கள். எந்த ஒரு அணிக்கு எதிராக விளையாடினாலும், திட்டங்களை சரியாக செயல்பட்டுத்தாவிட்டால், அந்த அணி உங்களை தோற்கடித்து விடும்.

போட்டிக்கு சிறந்த முறையில் நாங்கள் தயாரானோம். ஆனால் ஒரு அணியாக எங்கள் திட்டங்களை நாங்கள் செயல்படுத்தவில்லை. பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் என அனைத்து துறையிலும் நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை. இந்த தோல்வியால் நான் வருத்தமடைகிறேன். பேட்டிங்கில் முதல் 6 ஓவர்களை நாங்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. எனினும் 10 ஓவர்களுக்குப் பின்னர் உத்வேகம் பெற்றோம். ஆனால் அதன் பின்னர் அதிகமான விக்கெட்களை பறிகொடுத்ததால் உத்வேகத்தை இழந்தோம்.

எனவே ஒரு பேட்டிங் குழுவாக நாங்கள் நடுவரிசை மற்றும் பிற்பகுதியில் முன்னேற்றம் காண வேண்டும். பந்து வீச்சில் நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை. முதல் 6 ஓவர்களில் எங்களால் விக்கெட் கைப்பற்ற முடியாமல் போனது. நடு ஓவர்களில் சுழற்பந்து வீச்சாளர்கள் விக்கெட் வீழ்த்தவில்லை. இதனால் நெருக்கடி உருவானது. இருப்பினும் 10 ஓவர்களுக்குப் பிறகு நாங்கள் ஆட்டத்துக்குள் திரும்பி வந்தோம். ஆனால் அமெரிக்க அணி ஆட்டத்தை முடித்த விதமும், சூப்பர் ஓவரில் செயல்பட்ட விதமும் சிறப்பானது. அவர்களை பாராட்டியாக வேண்டும். இவ்வாறு பாபர் அஸம் கூறினார்.