மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் கோலாகலம்


விழுப்புரம்: மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் நேற்று முன்தினம் இரவு வைகாசி மாதம் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் விமரிசையாக நடைபெற்றது.

இதையொட்டி மூலவர் அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பின்னர்,அம்மனுக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, உற்சவர் அங்காளம்மனுக்கு பலவித மலர்களைக் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இரவு 10.30 மணிக்கு மேளதாளம் முழங்க வடக்கு வாசல் வழியாக உற்சவர் அங்காளம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார்.

அப்போது, ஊஞ்சல் மண்டபம் எதிரில் திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள், தீபமேற்றி அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து, கோயில் பூசாரிகள் அங்காளம்மனை வாழ்த்தி தாலாட்டுப் பாடல் பாடினர்.

இரவு ஊஞ்சல் உற்சவம் முடிந்து அம்மனுக்கு தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் பழனி மற்றும்அரசு அதிகாரிகள், ஏராளமானபக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசித்தனர்.