திருமலை வையாவூர் கோயிலில் ஜூன் 17-ம் தேதி கும்பாபிஷேகம்


தென்திருப்பதி என போற்றப்படும் திருமலை வையாவூர்  பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகத்துக்காக தயார் நிலையில் உள்ள ராஜகோபுரம்.

மதுராந்தகம்: மதுராந்தகத்தை அடுத்த திருமலை வையாவூர் கிராமத்தில் அமைந்துள்ள தென்திருப்பதி என போற்றப்படும்  பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் ஜூன் 17-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தை அடுத்த திருமலை வையாவூர் கிராமத்தில் தென்திருப்பதி என போற்றப்படும் அலர்மேல்மங்கை தாயார் சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் அமைந்துள்ளது.

இம்மலைக் கோயிலில், நரசிம்மர், ராமானுஜர், வராகபெருமாள் உட்பட பல்வேறு சந்நிதிகள் அமைந்துள்ளன. மேலும், கோயிலில் வராக தீர்த்தக் குளம் அமைந்துள்ளது. இங்கு, சுவாமி தரிசனம் செய்வதற்காக தென்மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடக உட்பட வெளிமாநிலங்களிலும் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், கோயிலில் உள்ள மண்டபங்கள், துண்கள், ராஜகோபுரம் உள்ளிட்டவை சேதமடைந்து, பொலிவிழந்து காணப்பட்டதால் திருப்பணிகள் மேற்கொள்ள வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதன்பேரில், கடந்த ஆண்டு பாலாலயம் செய்து கும்பாபிஷேக திருப்பணிகள் தொடங்கப்பட்டன.

இதில், கோயில் நிதியாக ரூ.48.85 லட்சம், ஆணையர் பொதுநல நிதியாக ரூ.69 லட்சம் மற்றும்உபயதாரர்கள் நிதியாக ரூ.18.40லட்சம் என மொத்தம் 1.36 கோடிமதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், கோயிலுக்கு சுற்றுச்சுவர், கங்கைகொண்டான் மண்டபம், அன்னதானக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், ராஜகோபுரம் சீரமைக்கப்பட்டு புதிதாக வண்ணம் தீட்டப்பட்டுள்ளன. மேலும், கோயிலின் திருப்பணிகள் நிறைவடைந்துள்ளதால் ஜூன் 17-ம் தேதி காலை 9:30 மணியிலிருந்து 10:30 மணிக்குள்ளான முகூர்த்தத்தில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

தென்திருப்பதி என பக்தர்களால் போற்றப்படுவதால் கும்பாபிஷேகத்தை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரக் கூடும். இதனால், தேவையான முன்னேற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் மேகவண்ணன் தலைமையிலான பணியாளர்கள் மேற்கொண்டுள்ளனர். மேலும், பக்தர்களின் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

x