புதுக்கோட்டையில் 166 மையங்களில் டிஎன்பிஎஸ்சி தேர்வு: காலை முதலே தேர்வெழுத வந்த தேர்வர்கள்


புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் 166 மையங்களில் இன்று (ஜூன் 9) டிஎன்பிஎஸ்சி தேர்வு நடைபெற்றது. தேர்வர்கள் காலை முதலே தேர்வு மையங்களுக்கு வரத் தொடங்கினர்.

தமிழகம் முழுவதும் இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 45,355 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்தனர். தேர்வர்கள் நீண்ட தூரம் சென்று தேர்வு எழுதுவதை தவிர்க்கும் விதமாக மாவட்டத்தில் மொத்தமுள்ள 12 வட்டங்களிலும் 166 தேர்வு மையங்களை தேர்வு செய்து, தேர்வர்களுக்கு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

கிராமப் பகுதியிலும் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டது. தேர்வு காலை 9 மணிக்கு தொடங்கிய நிலையில், அதிகாலையில் இருந்தே தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு செல்லத் தொடங்கினர். தேர்வுப் பணிகளை 166 முதன்மை கண்காணிப்பாளர்கள் கண்காணித்தனர்.

15 பறக்கும் படை குழுவினர் மையங்களைச் சோதனை செய்தனர். மேலும், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் 35 நடமாடும் குழுக்களைச் சேர்ந்தோர் மையங்களுக்கு வினா, விடை தாள்கள் கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டனர். அனைத்து மையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

புதுக்கோட்டை ராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மன்னர் அரசு கலை அறிவியல் கல்லூரி, அரசு மகளிர் கல்லூரி, பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப் பள்ளி மையங்களை ஆட்சியர் ஐ.எஸ்.மெர்சி ரம்யா பார்வையிட்டார். தேர்வு மையத்தில் தடையில்லா மின்சாரம், கூடுதல் பேருந்து சேவை ஏற்பாடு செய்யப்பட்டது.

பல்வேறு மையங்களில் உரிய நேரத்தைக் கடந்து தேர்வு எழுத வந்தவர்கள் அனுமதிக்கப்படாததால் சோகத்தோடு திரும்பிச் சென்றனர். புதுக்கோட்டை மாலையீடு பகுதி மற்றும் லெணாவிலக்கு ஆகிய இடத்தில் ஒரே பெயரில் உள்ள இருவேறு கல்வி நிறுவனங்களிலும் தேர்வு மையங்கள் செயல்பட்டன. ஒதுக்கப்பட்ட மையங்களுக்கு செல்லாமல் மாறிச் சென்றோர் கடும் அவதிக்கு ஆளாகினர். மேலும், தேர்வர்களை அழைத்து வந்தவர்கள் மையத்தின் வெளியே இரு சக்கர வாகனங்களை நிறுத்தி விட்டு காத்துக் கிடந்தனர்.