அதிமுகவை ஒன்றுபடுத்த புதிய ஒருங்கிணைப்பு குழு: கே.சி.பழனிசாமி, புகழேந்தி, ஜே.சி.டி.பிரபாகர் அறிவிப்பு


வா.புகழேந்தி, ஜே.சி.டி.பிரபாகர் மற்றும் கே.சி.பழனிசாமி.

சென்னை: அனைத்துத் தலைவர்களிடமும் பேசி ஒருமித்த கருத்துடன் கட்சியை ஒருங்கிணைப்பதற்காக அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்திருப்பதாக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.ஜே.சி.டி.பிரபாகர், ஓ.பன்னீர்செல்வம் அணியின் முன்னாள் கொள்கை பரப்புச் செயலாளர் வா.புகழேந்தி ஆகியோர் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக சென்னையில் நேற்று 3 பேரும் கூட்டாக நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக 7 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது. இனிமேலும் இத்தகைய தோல்வி ஏற்படாமல் இருப்பதற்கும் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மீண்டும்ஆட்சி அமைப்பதற்கும் அனைவரும் ஒன்றுபட வேண்டியது அவசியம்.

அதற்காக நாங்கள் ஒரு அணியில் இருந்து இந்த ஒருங்கிணைப்புப் பணியைச் செய்ய முடியாது என்பதால் நாங்கள் இருந்த அணியில் இருந்து விலகி, தற்போது அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவை உருவாக்கி உள்ளோம்.

அதிமுக தொண்டர்கள், தலைவர்களை ஒருங்கிணைக்கும் பணியை நாங்கள் இன்று (ஜூன் 8) தொடங்கியுள்ளோம். இதற்காகவே எதிரும் புதிருமாக இருந்த நாங்கள் ஒன்றாகி இந்த முயற்சியில் இறங்கியிருக்கிறோம். யாரையும் நாங்கள் குறை சொல்லவில்லை. தற்போதைய சூழலில் அதிமுகவை அழிக்கப் பார்க்கின்றனர். இதை தலைவர்களும், தொண்டர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டுமானால் ஒன்றுபடுவது அவசியம். இதைத்தான் மக்களும், கட்சித் தொண்டர்களும் விரும்புகின்றனர். எனவே, அதிமுகவில் உள்ளஅனைத்து அணியினரும், தொண்டர்களும் தங்கள் கருத்தை அதிமுக ஒருங்கிணைப்புக் குழு, எண், 44, கோத்தாரி சாலை, சென்னை என்றமுகவரிக்கு கடிதம் மூலம் அனுப்பலாம். அல்லது 90038 47889 என்ற எண்ணில் தெரிவிக்கலாம். பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் மூலமாகவும் தெரிவிக்கலாம்.

தொண்டர்களின் கருத்துகளை தெரிந்து கொண்ட பிறகு பழனிசாமி,ஓ.பன்னீர்செல்வம், டிடிவி.தினகரன், சசிகலா உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து நிதர்சனத்தை எடுத்துசொல்லி ஒருமித்த கருத்துடன் அனைவரையும் ஒருங்கிணைக்க முயற்சி மேற்கொள்வோம். வரும்டிசம்பருக்குள் அதிமுக ஒன்றிணைந்தாக வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.