ஜூன் 14 வரை மிதமான மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்


சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி பா.கீதா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் தென்மேற்குப் பருவமழை தீவிரமாக உள்ளது. ஜூன் 8-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் 13 செ.மீ., அம்மூரில் 8 செ.மீ., அரக்கோணம், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, ஆற்காடு ஆகிய இடங்களில் 7 செ.மீ., திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கு, மதுரை மாவட்டம் இடையப்பட்டி, கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் தலா 6 செ.மீ., விழுப்புரம், கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை, களியல் ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

தென்னிந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 14-ம்தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல, இன்று முதல் வரும் 12-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 3 டிகிரி ஃபாரன்ஹீட் வரைஉயர வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மழைக்கு வாய்ப்பில்லை. மன்னார் வளைகுடா பகுதிகள், தென் தமிழக கடலோரப் பகுதிகள்மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே,இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.