கேஜ்ரிவாலுக்கு மிரட்டல் முதல் 4 தீவிரவாதிகள் கைது வரை | டாப் 10 விரைவுச் செய்திகள்


> அரசியலமைப்பு சட்டம்தான் வழிகாட்டி: அரசியல் அமைப்புச் சட்டம்தான் ஆட்சிக்கான மிகப் பெரிய வேதம் என்றும், அதுதான் தனது வழிகாட்டி என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

> துரோகம் செய்தவர்களுக்கு காங்கிரஸில் இடமில்லை: "பதவி சுகம், பணத்துக்காக கட்சிக்கு துரோகம் செய்து பாஜகவில் சேர்ந்தோரை எக்காலத்திலும் காங்கிரஸில் சேர்க்க மாட்டோம்" என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

> டெல்லி மெட்ரோவில் கேஜ்ரிவாலுக்கு மிரட்டல்: டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் டெல்லி மெட்ரோ ரயிலில் வாசகங்கள் இருந்ததாக ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

> ஐஎஸ்ஐஎஸுன் தொடர்புடைய 4 பேர் கைது: குஜராத் மாநிலம், அகமதாபாதில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 4 பேரை குஜராத் தீவிரவாத எதிர்ப்பு குழுவினர் கைது செய்தனர். நான்கு பேரும், இலங்கையில் இருந்து வந்தவர்கள்.

> கேஜ்ரிவால் காவலை நீட்டிக்க மனு: டெல்லி மதுபான கொள்ளை தொடர்புடைய பணமோசடி வழக்கில் கைது செய்யப்படிருக்கும் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை நீட்டிக்க கோரி, டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை திங்கள்கிழமை மனு தாக்கல் செய்துள்ளது.

> 15 மணி நேரத்தில் சிறுவனுக்கு ஜாமீன்: புனேவில் மது போதையில் சொகுசு காரை இயக்கி இருவர் உயிரிழப்புக்குக் காரணமான 17 வயது சிறுவனுக்கு வெறும் 15 மணி நேரத்தில் ஜாமீன் வழங்கப்பட்ட சம்பவம் பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது. அந்தச் சிறுவனுக்கு சமூக சேவை, போதை விழிப்புணர்வு கட்டுரைகள் எழுதுதல் போன்ற தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளதும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

> ரெய்சிக்கு பிரதமர் மோடி இரங்கல்: “இந்தியா - ஈரான் இருதரப்பு உறவை வலுப்படுத்த இப்ராஹிம் ரெய்சி மேற்கொண்ட பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும். அவரது குடும்பத்தினருக்கும் ஈரான் மக்களுக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று ஈரான் அதிபர் ரெய்சி மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

> வாக்களிக்காதவர்களுக்கு வரியை அதிகரிக்கலாம்: அரசு இதைச் செய்யவில்லை அதைச் செய்யவில்லை என்று சொல்கிறீர்கள். இன்று நீங்கள் வாக்களிக்கவில்லை என்றால், அவைகளுக்கு நீங்கள்தான் பொறுப்பு, அரசு இல்லை என்று தெரிவித்த பாலிவுட் நடிகர் பரேஷ் ராவல், "வாக்களிக்காதவர்களுக்கு வரி அதிகரிப்பது போன்ற தண்டனைகளை வழங்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

> “என் மகனை ட்ரோல் செய்தனர்” - நடப்பு ஐபிஎல் சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முக்கியக் காரணம் அந்த அணியின் பவுலர் யாஷ் தயாள் வீசிய கடைசி ஓவர் தான். இந்த சூழலில் கடந்த ஆண்டு ஏலத்தில் அவரை ஆர்சிபி வாங்கிய போது பலரும் அதனை ட்ரோல் செய்ததாக யாஷ் தயாளின் தந்தை சந்தர்பால் தெரிவித்துள்ளார்.

> 60 ஆண்டுகளுக்குப் பின் விண்வெளிக்கு சென்ற வீரர்: அமெரிக்காவின் முதல் கருப்பின விண்வெளி வீரர் எட் டுவைட் (Ed Dwight), சுமார் 60 ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளிக்கு பயணம் மேற்கொண்டார். அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸின் ப்ளூ ஆரிஜின் விண்கலத்தில் அவர் பயணித்தார். அவருடன் மேலும் 5 பேர் பயணித்தனர்.

x