என் கன்னத்தில் அறைந்தவரை ஆதரிப்பவர்கள் பாலியல் கொடுமை, கொலையையும் நியாயப்படுத்துவார்கள்: கங்கனா ரனாவத்


கங்கனா ரனாவத்

புதுடெல்லி: என் கன்னத்தில் அறைந்தவரை ஆதரிப்பவர்கள் பாலியல் வன்கொடுமை, கொலை உள்ளிட்ட செயலையும் நியாயப்படுத்துவார்கள் என நடிகை கங்கனா ரனாவத் கூறியுள்ளார்.

இமாச்சல பிரதேசம் மண்டி மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் நடிகை கங்கனா ரனாவத். தேர்தல் வெற்றிக்குப் பிறகு, டெல்லி செல்வதற்காக சண்டிகர் விமான நிலையம் சென்ற கங்கனாவின் கன்னத்தில் சிஐஎஸ்எப் பெண் காவலர் அறைந்ததாக கூறப்படுகிறது. விவசாயிகள் போராட்டம் நடந்தபோது அதை கொச்சைப் படுத்தியதால் ரனாவத்தை கன்னத்தில் அறைந்ததாக அந்த பெண் காவலர் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதுடன் கைது செய்யப்பட்டார்.

இதனிடையே, அந்த பெண் காவலருக்கு சிலர் பாராட்டு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கங்கனா ரனாவத் தனது எக்ஸ் சமூகவலைதளத்தில் நேற்று கூறியதாவது:

பாலியல் வன்கொடுமை, கொலை, திருட்டு உள்ளிட்ட செயலில் ஈடுபடுவோர் உணர்வு, உடல் மற்றும் உளவியல் ரீதியிலான மற்றும் நிதி நெருக்கடி உள்ளிட்ட காரணங்களை கூறுவது உண்டு. எந்த ஒரு குற்றமும் காரணம் இல்லாமல் நிகழ்வதில்லை. இருந்தாலும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு நீதிமன்றம் தண்டனை வழங்குகிறது.

குற்றவாளிகள் கூறும் காரணங்களை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு ஆதரவளித்தால், அது அனைத்து சட்டங்களையும் மீறி மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபட தூண்டுவது போலாகிவிடும்.

ஒருவரின் அனுமதியின்றி அவரின் உடலை தொடுவது அவரை தாக்குவது போன்ற சம்பவங்களில் ஈடுபடுபவரை ஆதரிப்பவர்கள், பாலியல் வன்கொடுமை, கொலை உள்ளிட்ட குற்றங்களையும் நியாயப்படுத்துவார்கள்.

எனவே, இதுபோன்ற மனநிலையில் உள்ளவர்கள் யோகா,தியானம் உள்ளிட்ட பயிற்சியில் ஈடுபட வேண்டும். இல்லாவிட்டால், வாழ்க்கை மிகவும் கசப்பானதாகவும் சுமையானதாகவும் மாறிவிடும். காழ்ப்புணர்ச்சி, வெறுப்பு மற்றும் பொறாமையிலிருந்து அவர்கள் தங்களைத் தாங்களே விடுவித்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்