கேளம்பாக்கம் ஏரியில் குடிநீர் திட்டம்: பொதுமக்கள் எதிர்ப்பு


சென்னை: கேளம்பாக்கம் ஊராட்சியில் உள்ள ஏரியில் இருந்து கிணறுகள் தோண்டி அங்கிருந்து குழாய்கள் மூலம் கோவளம் ஊராட்சியில் உள்ள கோவளம், குன்றுக்காடு, செம்மஞ்சேரி ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து ஏரியில் குடிநீர் தரம், மண் தன்மை பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது. நேற்று காலையிலேயே குடிநீர் வாரிய அதிகாரிகள் கேளம்பாக்கம் பகுதியில் உள்ள ஏரிக்கு வந்து போர்வெல் இயந்திரத்தின் உதவியுடன் ஆழ்துளை கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் கேளம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ராணி எல்லப்பன், துணைத் தலைவர் பாஸ்கரன், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள், அனைத்துக் கட்சியினர் அங்கு திரண்டனர். ஊராட்சியின் அனுமதி மற்றும் ஊராட்சி மன்ற தீர்மானம் இல்லாமல் எப்படி ஆழ்துளை கிணறு அமைக்கலாம் என்று கேட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அனைத்துக் கட்சியினரும், பொது மக்களும் அதிகாரிகளை சூழ்ந்து முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கேளம்பாக்கம் காவல் உதவி ஆணையர் வெங்கடேசன், ஆய்வாளர் தீபக்குமார் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்நிலையில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் செல்வராஜ் தலைமையில் அதிகாரிகள் பொதுமக்களுக்கு திட்டத்தின் நோக்கம் குறித்து எடுத்துரைத்தனர். ஆனால், அதை ஏற்க மறுத்த பொது மக்களும், வார்டு உறுப்பினர்களும் ஏரிப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து செங்கல்பட்டு சார் ஆட்சியர் நாராயண சர்மா தலைமையிலான வருவாய்த்துறையினர் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

தற்போது சோதனை முயற்சியாகத்தான் இப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மண் வளமும், குடிநீரின் தரமும் நன்றாக இருந்தால்தான் 4 கிணறுகள் தோண்டப்படும் அவற்றில் 2 கிணறுகள் கேளம்பாக்கம் ஊராட்சிக்கு வழங்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து பொது மக்களை திரட்டி கருத்து கேட்டு முடிவு அறிவிக்க 2 நாட்கள் அவகாசம் வழங்குமாறு கேளம்பாக்கம் ஊராட்சி தலைவர் ராணி எல்லப்பன் கோரிக்கை வைத்தார்.

சோதனை வெற்றி பெற்றால் மட்டுமே திட்டம் நிறைவேற்றப்படும் என்றும், அதற்கு முன்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படும் என்றும், சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் ஒப்புதல் பெற்ற பிறகே திட்டம் நடைமுறைக்கு வரும் என எழுதி தருவதாக உறுதி அளித்து அதிகாரிகள் கையொப்பமிட்டு எழுதிக் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து இத்திட்டத்தை செயல்படுத்த ஊராட்சி சார்பில் ஆட்சேபணை தெரிவிப்பதாக கடிதம் அளிக்கப்பட்டது.

பின்னர் மூன்று இடங்களில் மண் பரிசோதனை மற்றும் 15 அடி ஆழத்தில் நீர் இருப்பு அளவு பரிசோதனை, நீர் மாதிரி போன்றவை மேற்கொள்ளப்பட்டு குடிநீர் வாரிய அதிகாரிகள் திரும்பிச் சென்றனர். ஏற்கனவே இந்த திட்டம் தையூர் ஏரியில் செயல்படுத்தப்பட்டது. அப்போது தையூர் கிராம மக்கள் எதிர்ப்பு காரணமாக திட்டம் கைவிடப்பட்டு கேளம்பாக்கம் ஏரிக்கு மாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.