நிதிஷ் குமார், தேஜஸ்வி யாதவ் ஒரே விமானத்தில் பயணம்


தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) கூட்டத்தில் கலந்து கொள்ள பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரும், இண்டியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவர் தேஜஸ்வி யாதவும் பாட்னாவிலிருந்து ஒரே விமானத்தில் அருகருகே இருக்கைகளில் அமர்ந்து டெல்லிக்கு பயணித்தனர்.

இது அரசியல் களத்தில் அனல் பரப்பும் விவாதங்களை கிளப்பியது . இந்தநிலையில், ஒரே விமானத்தில் அருகே ஒன்றை மணி நேரம் அமர்ந்து பயணம் செய்தது தற்செயலான நிகழ்வு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆர்ஜேடி தலைவர் ஒருவர் கூறுகையில், “ டெல்லி விமானத்தில் தேஜஸ்வி யாதவ், நிதிஷ் குமாரை சந்தித்தது தற்செயலாக நடந்தது. பாஜகவால் பெரும்பான்மை பெற முடியவில்லை. அதேநேரம், இண்டியா அணியும் பின்தங்கவில்லை. எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கான பணியை தொடங்கி பின்னர் வெளியேறியவர் நிதிஷ் குமார். எனவே அவர் எப்போது வேண்டுமானலும் எங்கள் கூட்டணிக்கு திரும்பலாம் என்றார்.

ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு மூன்றாவது முறையாக பிரதமர் பதவியில் அமரும் முதல் தலைவர் என்ற பெருமையை நரேந்திர மோடி பெற உள்ளார். தனிப் பெரும்பான்மை கிடைக்காததால் மத்தியில் ஆட்சி அமைக்க தெலுங்குதேசம், ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளை சார்ந்திருக்க வேண்டிய நிலை பாஜவுக்கு ஏற்பட்டுள்ளது.