கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலைவிட காஞ்சியில் திமுக, அதிமுகவுக்கு குறைந்த அளவு வாக்குகள் பதிவு


மதுராந்தகம்: காஞ்சிபுரம் மக்களைவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் செல்வம் செங்கல்பட்டு சட்டப்பேரவைத் தொகுதியில் 1,33,604 வாக்குகளும், திருப்போரூர் 1,02,729, செய்யூர் 76,648, மதுராந்தகம் 77,747, உத்திரமேரூர் 92,897, காஞ்சிபுரத்தில் 99,397 என மொத்தம் 5 லட்சத்து 86 ஆயிரத்து 044வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

ஆனால், கடந்த 2019-ம்ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 6 லட்சத்து 84 ஆயிரத்து 044 வாக்குகள் பெற்றிருந்தார். இதன்மூலம், கடந்த மக்களவைத் தேர்தலை விட தற்போது நடைபெற்ற தேர்தலில் 98 ஆயிரம் வாக்குகள் குறைவாக பெற்றுள்ளார்.

அதிமுக சார்பில் கடந்த 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் மரகதம் 3 லட்சத்து 97 ஆயிரத்து 372 வாக்குகள் பெற்றிருந்தார். ஆனால்,தற்போது நடந்து முடிந்துள்ள தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ராஜசேகர் செங்கல்பட்டு 59,815, திருப்போரூர் 55,669, செய்யூர் 50,137, மதுராந்தகம் 69,740, உத்திரமேரூர் 70,152, காஞ்சிபுரம் 55,482 என மொத்தம் 3 லட்சத்து 04 ஆயிரத்து 571வாக்குகள் பெற்று இரண்டாமிடம் பிடித்து தோல்வியடைந்தார்.

இதில், கடந்த 2019-ம்ஆண்டு தேர்தலை விட தற்போது நடைபெற்றுள்ள தேர்தலில் அதிமுகவுக்கு 92 ஆயிரத்து 801 வாக்குகள் குறைவாக கிடைத்துள்ளது.