பாஜகவுக்கு ஆதரவளிக்க நிதிஷ் குமார் விதித்த நிபந்தனைகள் என்னென்ன?


புதுடெல்லி: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று தொடர்ந்து 3-வதுமுறையாக ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. எனினும், பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் மத்தியில் பாஜக ஆட்சி அமைக்க, 16 இடங்களில் வெற்றி பெற்றுள்ள சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் மற்றும் 12 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) கட்சிகளின் ஆதரவு அவசியம் தேவைப்படுகிறது.

அதேநேரம், இந்த 2 கட்சிகளையும் தங்கள் பக்கம் இழுத்து ஆட்சி அமைக்க இண்டியா கூட்டணியும் முயன்று வருவதாகக் கூறப்படுகிறது. இதனால், இந்த இரு கட்சிகளின் தலைவர்களும் டெல்லி அரசியலில் கிங் மேக்கர்களாக உருவெடுத்துள்ளனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட இவ்விரு தலைவர்களும் பாஜகவுக்கு ஆதரவளிக்க பல்வேறு நிபந்தனைகளை விதிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

நிதிஷ் குமாரைப் பொருத்தவரை மத்திய அமைச்சரவையில் 4 கேபினட், 1 இணை அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்க இருப்பதாக ஜேடியு மூத்த தலைவர் ஒருவர் கூறியுள்ளார். ஆனால், தேர்தல் முடிவு வெளியாவதற்கு முன்பு, 3 கேபினட், 1 இணையமைச்சர் பதவி தர பாஜக உறுதி அளித்ததாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக, பிஹார் மாநிலத்துக்கு அதிக அளவில் உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்த ஏதுவாக, ரயில்வே, ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளம் உள்ளிட்ட முக்கிய துறைகளை கோர இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதுபோல, பிஹார் சட்டப்பேரவைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடத்தப்பட வேண்டி உள்ளது. ஆனால் அதற்கு 6 மாதம் முன்பாகவே தேர்தலை நடத்த வேண்டும் என கோரிக்கை வைக்க இருப்பதாக ஜேடியு-வின் மற்றொரு தலைவர் தெரிவித்துள்ளார். இதன்மூலம் பேரவையில் 45 ஆக உள்ள தனது பலத்தை அதிகரிக்க அக்கட்சி விரும்புவதாகக் கூறப்படுகிறது. ஆனால் பாஜக இதை ஏற்க மறுப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும் பிஹார் லகு உதயாமி யோஜனா திட்டத்தை செயல்படுத்த மத்திய தொகுப்பில் இருந்து கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்ட இந்த திட்டம், 94 லட்சம் ஏழைக் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க வகை செய்கிறது.

மேலும் பிஹாருக்கு கூடுதல் நிதி பெறுவதற்கு ஏதுவாக சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரும் தீர்மானத்தை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கவும் அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் வழங்கியது. இந்தக் கோரிக்கையை நிறைவேற்றுமாறு மத்திய அரசுக்கு நிபந்தனை வைக்கவும் ஜேடியு திட்டமிட்டுள்ளது.