சந்திரபாபு, நிதிஷ் நிபந்தனைகள் முதல் நாம் தமிழர் கட்சிக்கு அங்கீகாரம் வரை | டாப் 10 விரைவுச் செய்திகள்


> பிரதமராக 3-வது முறையாக பதவியேற்க தயாராகிறார் மோடி!: நாடு முழுவது மக்களவை தேர்தல் முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியாகின. இதில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மைக்கு தேவையான 272 தொகுதிகளுக்கு மாறாக, 240 தொகுதிகளே கிடைத்துள்ளன. எனினும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் அளவில் 293 தொகுதிகளை பெற்றுள்ளது. இந்தநிலையில், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் 3-வது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது.

இதன் அடுத்தகட்டமாக, தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் மோடி. மேலும், 17-வது மக்களவையை கலைப்பதற்கான பரிந்துரை கடிதத்தையும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை நேரில் சந்தித்து அளித்தார். 17-வது மக்களவையை கலைக்கும் பரிந்துரைகளையும் ஏற்றுக்கொண்ட குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடியின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார். மேலும் புதிய அரசு அமையும் வரை மோடியை காபந்து பிரதமராக செயல்படுமாறு கேட்டுக்கொண்டார்.

இதற்கிடையே, ஆட்சி அமைக்கக் கோருவது தொடங்கி உரிய நடைமுறைகளில் பாஜக துரிதமாக செய்லபட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, மூன்றாவது முறையாக பிரதமராக மோடி வரும் சனிக்கிழமை பதவியேற்க உள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

> “என்டிஏ கூட்டணியில் தான் அங்கம் வகிக்கிறேன்” - சந்திரபாபு நாயுடு உறுதி: முன்னதாக, “தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் அங்கம் வகிக்கிறேன். என்டிஏ கூட்டணியின் கூட்டத்தில் பங்கேற்கிறேன்” என்று கூட்டணி குறித்து தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளார் சந்திரபாபு நாயுடு. தேர்தல் வெற்றிக்கு பின்னர் செய்தியாளர்களை புதன்கிழமை சந்தித்த அவர், "எனக்கும் அனுபவங்கள் உள்ளன. நாட்டில் பல்வேறு அரசியல் மாற்றங்களை கண்டுள்ளேன். இது மாதிரியான சிறப்பு தேர்தலை பார்த்தது இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் அங்கம் வகிக்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

> பாஜகவுக்கு சந்திரபாபு நாயுடு, நிதிஷ் நிபந்தனைகள்: சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் 3-வது முறையாக ஆட்சி அமைக்க தீவிரம் காட்டி வருகிறது பாஜக. தெலுங்கு தேசம் 16 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் 12 தொகுதிகளிலும் வென்றுள்ளது.

இதற்கிடையே, இவ்விரு கட்சிகளும் சில நிபந்தனைகள் விதிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, இரு மாநிலங்களும் சிறப்பு அந்தஸ்து கோரிக்கையை பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றன. இந்த கோரிக்கையை தற்போது ஆட்சிக்கு ஆதரவு தெரிவிக்க நிபந்தனைகளாக விதித்து வருவதாக கூறப்படுகிறது.

இது தவிர, இருகட்சிகளுமே மக்களவை சபாநாயகர் பதவி தங்களுக்கு வேண்டும் என்ற விருப்பத்தை பாஜகவிடம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. இதற்கு காரணம், தற்போது மக்களவையில் எந்த கட்சிக்குமே பெரும்பான்மை இல்லை. கூட்டணி ஆட்சியே நடைபெற உள்ளது. இத்தகைய சூழலில் சபாநாயகர் பதவி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என கருதப்படுகிறது. கடந்த இரு தேர்தல்களில் பெரும்பான்மை பெற்ற பாஜக, இரு முறையும் சபாநாயகர் பதவியை தங்கள் வசமே வைத்துக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், சில முக்கிய அமைச்சரவை இலாகாகளையும் கேட்டு நிபந்தனை விதித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

> “ஆர்ப்பாட்ட கொண்டாட்டங்கள் தேவையில்லை” - மு.க.ஸ்டாலின்: “மக்கள் நமக்கு மகத்தான வெற்றியைத் தந்திருக்கிறார்கள். அதைக் கொண்டாடுவது என்பது மக்களுக்கான நமது பணியின் மூலமாகத்தான் இருக்க வேண்டும். ஆர்ப்பாட்டக் கொண்டாட்டங்கள் தேவையில்லை. வாக்களித்த மக்களை நேரில் சென்று நன்றி தெரிவியுங்கள்,” என்று திமுக தொண்டர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

> தமிழகத்தில் 13 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு: தமிழகத்தில் வியாழக்கிழமை ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

> “பாஜக வளர்ந்திருப்பதில் மாற்றுக் கருத்தே இல்லை” - அண்ணாமலை: “தமிழக மக்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறோம். மக்கள் எப்போதும் சிந்தித்துத்தான் ஒரு தீர்ப்பைக் கொடுப்பார்கள். எங்கள் கட்சியின் வாக்கு சதவீதத்தை அதிகப்படுத்த வேண்டும் என்று நினைத்து அதை அதிகப்படுத்தியுள்ளனர். ஆனால், அதை எம்.பிக்களாக மாற்ற முடியவில்லை. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெற்றி பெற்றுள்ளவர்களுக்கு எங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்,” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

> ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ராஜினாமா: ஒடிசா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும் தோல்வியை சந்தித்ததை அடுத்து, அம்மாநில முதல்வரும், பிஜு ஜனதா தளம் தலைவருமான நவீன் பட்நாயக் ராஜினாமா கடிதத்தை ஆளுநர் ரகுபர் தாஸிடம் அளித்தார். நவீன் பட்னாயக் கடந்த 2000-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 24 ஆண்டுகளுக்கும் மேலாக ஒடிசாவின் முதல்வராக இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

> “அரசியல் சாணக்கியர் அமித் ஷா கையேந்தி நிற்கிறார்”: மக்களவைத் தேர்தல் முடிவுகள் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், “அரசியல் சாணக்கியர் என்று சொல்லிக் கொண்ட அமித் ஷா, கடைசியில் தான் விரித்த வலையிலேயே மிகவும் மோசமாக மாட்டிக்கொண்டார். ஒவ்வொரு அடியிலும் பொதுமக்களை முட்டாளாக்கி, மிகப்பெரிய முதலாளிகளுக்கு சவால் விடும் ராஜாக்களின் ராஜா, இன்று கிண்ணத்துடன் கையேந்தி பல கதவுகளைத் தட்டி, எம்.பி.,க்களை நன்கொடையாகத் தேடிக் கொண்டிருக்கிறார்” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

> அங்கீகாரம் பெற்றது நாம் தமிழர் கட்சி!: தேர்தல் ஆணைய விதிப்படி, அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாற, சட்டப் பேரவை தேர்தலில் 6 சதவீத வாக்குகளுடன் 2 சட்டப்பேரவை தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் அல்லது மக்களவை தேர்தலில் 6 சதவீத வாக்குகளுடன், ஒரு மக்களவை தொகுதியில் வெற்றிப்பெற வேண்டும். அல்லது சட்டப்பேரவை தேர்தலில் மொத்த தொகுதிகளில் 3 சதவீத இடங்களில் வெற்றி பெற வேண்டும். அல்லது மக்களவை தேர்தலில் குறைந்தபட்சம் 8 சதவீத வாக்குகளைப் பெற வேண்டும்.

இதற்கிடையில், கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது நாம் தமிழர் கட்சி 6.58 சதவீதம் வாக்குகளை மட்டுமே பெற்றது. இதனால் அக்கட்சியால் அங்கீகாரம் பெற முடியவில்லை. இதனால் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அக்கட்சியின் விவசாய சின்னம் பறிபோனது. மேலும் அவர்கள் கேட்ட சின்னம் கிடைக்கவில்லை. 'மைக்' சின்னம் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 8.19% வாக்குகளை வசப்படுத்தியன் மூலம் அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்ற அந்தஸ்துக்கு நாம் தமிழர் கட்சி உயர்ந்துள்ளது.

மக்களவை தேர்தலில் தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி மொத்தமாக 8.19% வாக்குகளை பெற்றது. அதேபோல் மக்களவை தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரி சேர்த்து மொத்தமாக நாம் தமிழர் கட்சி 35.60 லட்சம் வாக்குகளை பெற்றுள்ளது. மேலும், 12 மக்களவை தொகுதிகளில் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்றுள்ள நாம் தமிழர் கட்சி அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சியாக மாறி உள்ளது கவனிக்கத்தக்கது.

> “கோப்பையுடன் வாருங்கள்” - ஜெய் ஷா: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளர் ஜெய் ஷா, இந்திய அணிக்கு தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார். அவர், “டி20 உலகக் கோப்பையை வென்று வாருங்கள். ஜெய் ஹிந்த்” என தனது சமூக வலைதள பதிவில் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, டி20 உலகக் கோப்பை தொடரை நிச்சயம் வெல்லும் அணியை பெற்றுள்ளதாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் திராவிட் தெரிவித்துள்ளார். நியூயார்க் நகரில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

x